திருப்பதியில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பங்கேற்றுப் பேசிய ஆந்திர துணைமுதல்வர் பவன் கல்யாண் ‘சனாதனத்தை அழிக்க நினைப்பவர்கள் அழிந்து போவார்கள்’ என்று தெரிவித்துள்ள நிலையில் சனாதன விவகாரத்தில் அவர், தமிழகத் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை மறைமுகமாக விமர்சித்துப் பேசியதாக பலரும் கூறிவருகின்றனர்.
கடந்தாண்டு செப்டம்பர் மாதம் 2 ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் அப்போது விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். மேடையில் பேசிய அவர், ‘மலேரியா, டெங்கு நோய்கள் போல், சனாதனத்தையும் ஒழிக்க வேண்டும் ‘என்று பேசினார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புகள் அவரது பேச்சிற்கு கண்டனம் தெரிவித்தன.
துணை முதல்வர் உதயநிதியின் பேச்சிற்கு எதிரான நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த நிலையில் சனாதன விவகாரத்தில் உதயநிதிக்கு பெங்களூரு நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கியது.
உதயநிதியின் பேச்சுக்கு பவன் கல்யாண் பதிலடி
இந்த நிலையில், உதயநிதியின் பேச்சுக்கு பவன் கல்யாண் பதிலடி கொடுத்துள்ளார். அதன்படி, ஆந்திர துணை முதலர் பவன் கல்யாண் திருப்பதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: ”இங்கு நிறையப் பேர் தமிழ் பேசுபவர்களாக உள்ளனர். அதனால் தமிழில் பேசுகிறேன். அன்டை மாநிலத்தைச் சேர்ந்த இளம் தலைவர் ஒருவர் சனாதன தர்மம் வைரஸ் போன்றது. அதை அழிக்க வேண்டும் என்று பேசியிருந்தார். ஆனால், சனாதன தர்மத்தை யாராலும் அழிக்க முடியாது. அதை அழிக்க நினைத்தால் நீங்கள் தான் அழிந்து போவீர்கள் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், நான் மக்களிடம் உண்மையைப் பேச விழைகிறேன். உங்களைப் போல் நிறையப் பேர் இங்கு வந்து போய்விட்டார்கள். சனாதனத்தை அழிப்பதாகக் கூறி, யாராலும் அதை அழிக்க முடியவில்லை. அது நிலைத்து நிற்கிறது. சனாதன தர்மத்தை தாக்கிப் பேசும்போது யாரும் அதைக் கண்டிப்பதில்லை. அதனால், சரி என்றாகாது. நாம் நாட்டில் மதச்சார்பின்மை என்பது ஒருவழிப் பாதையாக இருக்க முடியாது. அது இருவழிப்பாதை.
நான் ஒரு சனாதன இந்து, மதச்சார்பின்மையைச் சார்ந்த சிலர், சனாதனத்தைக் கேலி செய்கின்றனர். அவர்களுக்கு ஒன்றைச் சொல்லிக் கொள்கிறேன். என் உயிர் போனாலும் இந்த சனாதனத்தைக் காப்பாற்றுவேன். ஆனால், மற்ற மதங்களை விமர்சிப்போர் மீது கடுமையான நடவடுக்கை எடுக்கப்படும் நிலையில், இந்து சனாதனத்தை விமர்சிப்போர் மீது நீதிமன்றம் கடுமையான நடவடிக்கைகள் எடுப்பதில்லை” என்று தெரிவித்துள்ளார்.
சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்தவர்
இந்த நிலையில், ஆந்திர துணை முதல்வரும் சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்தவர், அதேபோல் உதயநிதி ஸ்டாலினும் அரசியல் பின்புலம் இருந்தாலும் சினிமாவில் இருந்துதான் அரசியலுக்கு வந்து, தற்போது துணை முதல்வர் ஆகியுள்ளார்.
பவன் கல்யாண் சினிமாவில் இருந்தவரை எதுவும் பேசாமல் இருந்துவிட்டு, தற்போது பதவி கிடைத்தபோது மட்டும் கடுமையான எதிர்வினை ஆற்றுகிறாரே எனப் பலரும் கூறுகின்றனர்.
மேலும், சனாதனம் பற்றிய உதயநிதி பேச்சு தொடர்பான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில், ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், துணை முதல்வர் உதயநிதியை தாக்கிப் பேசியுள்ளது இரு மாநிலங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பவன் கல்யாணின் பேச்சுக்கு விரைவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி கொடுப்பாரா என்று உடன்பிறப்புகளும் அரசியல் விமர்சகர்களும் எதிர்பார்த்துள்ளனர்.