Home Tamil Movie News ஆஸ்கர் வெல்லுமா அஜித்தின் இந்த டாகுமெண்டரி படம்? பிரபல ஓடிடியில் விரைவில் ரிலீஸ்

ஆஸ்கர் வெல்லுமா அஜித்தின் இந்த டாகுமெண்டரி படம்? பிரபல ஓடிடியில் விரைவில் ரிலீஸ்

ajith bike tour
ajith bike tour

துப்பாக்கி சுடுதல் வீரர், பைக் ரேஸர், கார் ரேசர் என பன்முகங்களைக் கொண்டவர் அஜித்குமார். தான் நினைத்த ஒன்றை சாதித்துக் காட்டுவதில் தீவிரமானவர். அவர் சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும்போதே அவர் பைக் ரேஸ், கார் ரேஸ், பைக்கில் உலகச் சுற்றுப் பயணம் இதெல்லாம் செய்துகாட்டினார்.

சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும்போது இப்படி பைக் டூர் போவதற்கு சிலர் விமர்சித்தாலும், அவர் பட ஷூட்டிங்கிற்கு பாதிப்பு இல்லாமல்தான் இந்த செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும் அவருக்கு ஆதரவளித்தனர். இந்த நிலையில் அஜித்குமாரின் பைக் உலகச் சுற்றுப் பயணம் ஆவணப்படமாக உருவாகவுள்ளது.

கடந்தாண்டு ஜூன் மாதம் ஹெச்.வினோத் இயக்கத்தில் துணிவு படத்தில் அஜித்குமார் நடித்துக் கொண்டிருக்கும் போதே தன் நண்பர்களுடன் இணைந்து ஐரோப்பாவில் பைக் டூர் பயணம் மேற்கொண்டார். அப்போது இதுகுறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வைரலாகின.

அதன்பின், துணிவு படத்தின் ஷூட்டிங் முடிந்த பின் அஜித்குமார் பைக் சுற்றுப் பயணத்தை மீண்டும் தொடங்குவார் என்றும் கூறப்பட்டது. அதேபோல், மீண்டும் தனது பைக் சுற்றுப்பயணத்தைத் தொடங்கிய அவர், புனே, லடாக், சிம்லா உள்ளிட்ட வட இந்திய பகுதிகளில் பயணம் மேற்கொண்டார்.

அஜித்குமார், பைக் டூர் பயணத்தின்போது அவருடன் பிரபல ஒளிப்பதிவாளர் நிரவ்ஷாவுடன் சென்று, இந்த பைக் டூர் பயணத்தை ஆவணப்படமாக்கியதாக தகவல் வெளியானது. அஜித்தின் 2 ஆம் சுற்றுப் பைக் பயணத்திற்கு #RideForMutualRespect என்று தலைப்பிடப்பட்டது. இதில் முதற்கட்டமாக 16 நாடுகளுக்குச் செல்லவிருப்பதாக கூறப்பட்டது.

அதேபோல் அஜித்குமார் பல நாடுகளுக்குச் சென்ற புகைப்படங்கள் சிறிய வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வெளியாகி அவரது ரசிகர்களை குஷிப்படுத்தின. குறிப்பாக வழியில் தன் ரசிகர்களை சந்தித்து உரையாடுவது, அவர்களுடன் புகைப்படம், செஃல்பி எடுப்பது, உள்ளூர் உணவகங்களில் சாப்பிடுவது, இரு ரசிகரின் சக்கரவானத்திற்கு பஞ்சர் ஒட்டுவது என்று எந்த பந்தாவும் இல்லாமல் அவர் நடந்துகொண்டது எல்லோரது கவனத்தையும் ஈர்த்தது.

கடந்த ஆண்டு மே மாதம் அஜித்- மகிழ்திருமேனி கூட்டணியில் விடாமுயற்சி ஷூட்டிங் ஆரம்பித்தது. இப்படத்தை லைகா தயாரிக்க, இதன் டிஜிட்டல் ரைட்ஸ் உரிமையை நெட்பிளிக்ஸ் னிறுவனம் பெற்றது.

நெட்பிளிக்ஸில் வெளியாகும் அஜித்தின் பைக் டூர்

அத்துடன் அஜித்தின் பைக் டூர் பயணத்தின் டாக்குமெண்டரியை நெட்பிளிக்ஸ் நிறுவனம் தொகுத்து அதை நெட்பிளிக்ஸ் பக்கத்தில் வெளியிட இருப்பதாகவும் கூறப்பட்டது. அதன்படி இதுவரை யாரும் செல்லாத வட இந்தியா பகுதிகள், ஐரோப்பாவின் பல நாடுகளுக்குப் பைக்கிலேயே பயணம் செய்து, தன் பெருவிருப்பத்தை, லட்சியத்தை துணிந்து விடாமுயற்சியுடன் நிறைவேற்றியுள்ள அஜித்குமாரின் இந்த பைக் டூர் பயண டாக்குமெண்டரியை நெட்பிளிக்ஸ் விரைவில் ரிலீஸ் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகிறது.

இதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. அஜித் இதுவரை பைக் டூர் பயணத்தின்போது எடுத்த புகைப்படங்களும், வீடியோக்களும் மட்டும்தான் வெளியானது. ஆனால், குறிப்பிட்ட இடங்களுக்குச் சென்றபோது அங்கு நின்றபடி அஜித் தன் அனுபவத்தை ஆங்கிலத்தில் பகிர்ந்து கொண்டதையும் ஒளிப்பதிவாளர் நிரவ்ஷா பதிவு செய்துள்ளார்.

இந்த நிலையில் தனது வீனஸ் டூர்ஸ் நிறுவனத்தின் புரொமோ வீடியோவில்  அஜித்குமார் பேசியது வைரலாகி வருகிறது. அதில், ‘மதம் நீங்கள் இதுவரை சந்திக்காத மக்கள் மீது வெறுப்பைத் தூண்டும் என்ற வாசகம் இருக்கிறது. இது உண்மையே. மதம், சாதி என எதுவாக இருந்தாலும், மனிதர்களைச் சந்திப்பதற்கு முன்பே அவர்களின் மீது தவறான மதீப்பீட்டை உருவாக்குகிறோம்.

இப்பயணத்தின் மூலம் பல்வேறு தேசம், மதம், கலாச்சாரம் சார்ந்த மக்களைப் பார்ப்பீர்கள். இதன் மூலம் அம்மக்களின்  உணர்வுகளை  நம்மால் புரிந்துகொள்ள முடியும்’’ என்று தெரிவித்துள்ளார். இவை தரமான வடிவில் டாகுமெண்டரியாக நெட்பிலிக்சில் காண ரசிகர்கள் ஆர்வமுடன் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.