திங்கட்கிழமை, டிசம்பர் 30, 2024

விஜய், சீமான், திருமாவளவன் 3 பேரும் இணைந்து அரசியல் செய்வார்களா? திமுக, அதிமுக என்னாகும்? பிரபல நடிகர் ஓபன் டாக்

தமிழக அரசியலில் விஜய், சீமான், திருமாவளவன் ஆகிய 3 அரசியல் கட்சித் தலைவர்களும் இணைவார்களா? என்று கேள்வி எழுந்துள்ள நிலையில், இதுகுறித்து பிரபல அரசியல் பிரமுகர் மற்றும் சினிமா நடிகரும் தகவல் பகிர்ந்துள்ளார்.

விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு வரும் அக்டோபர் 27 ஆம் தேதி விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் நடைபெறவுள்ளது. இம்மாநாடு தான் விஜயின் அரசியல் பிரவேசத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கும், அவர் கட்சியின் கொள்கைகளும் திட்டங்களும் என்ன என்பது தெரிய வரும். எனவே இக்கட்சியின் முதல் மா நாட்டை அக்கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மட்டுமல்ல, அனைத்து கட்சி அரசியல் தலைவர்களுமே எதிர்பார்த்துள்ளனர்.

விஜய் அரசியல் கட்சி தொடங்குவதற்கு முன்னமே பல ஆண்டுகளாக தமிழகத்தில் அரசியல் செய்து வருபவர் திருமாவளவன். இவரது விடுதலை சிறுத்தைகள் கட்சி திராவிட கட்சிகளுடன் இணைந்து பயணித்து வருகிறது என்றாலும் தற்போது திமுக கூட்டணியில் உள்ளது. திருமாவளவன், தனது கட்சிக்கு எனத்.தனிக் கொள்கைகளுடன் மதுவிலக்கு அமல்படுத்தப்பட வேண்டும், ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்று ஜனநாயகக் கோரிக்கையை வலியுறுத்தும் வகையில் குரல் கொடுத்து வருகிறார். சமீபத்தில் விசிக சார்பில் மதுஒழிப்பு மாநாடும் நடத்தப்பட்டது.

விஜயின் அரசியல் வருகை பற்றி திருமாவளவன், சீமான் கூறியதாவது:

நடிகர் விஜய்யின் அரசியல் வருகை என்பது பெரியாரின் அரசியலுக்கு வலு சேர்க்கும் வகையில் இருக்கிறது என்று விஜய்க்கு ஆதரவளிப்பது போல் கூறியிருந்தார். திமுக, பாஜக, அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்களூம் விஜய்யின் அரசியல் வருகை பற்றி பல்வேறு கருத்துகள் கூறியிருந்தாலும் அரசியலில் ஆழ்ந்த அனுபவம் உள்ள திருமாவின் கருத்து விஜய்யைப் பற்றிப் பாசிட்டிவாக இருந்ததாக பேசப்பட்டது.

அதேபோல், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நாம் தமிழர் கட்சியில் ஒருங்கிணைப்பாளராக இருக்கும் சீமான் சமீபத்தில் நடந்த லோக் சபா தேர்தலில் அக்கட்சியின் வாக்கு சதவீதம் அதிகரித்தது. இந்த நிலையில் விஜயின் அரசியல் வருகை பற்றி சீமான், அரசியலுக்கு வரும் ஒவ்வொருவரின் நோக்கமும் வெற்றி பெற வேண்டும் என்பதே. வெற்றி பெற வேண்டும், அதிகாரத்திற்கு வரணும் என்ற நோக்கம் இருக்க கூடாது என்று நாம் கூற முடியாது. தம்பி விஜயின் கனவு வெல்ல வாழ்த்துகள் என்று கூறியிருந்தார்.

ஆனால் விசிக, நாம் தமிழர் ஆகிய இரண்டு கட்சிகளுமே விஜயின் அரசியல் வருகையை எதிர்க்கவில்லை. விமர்சிக்கவில்லை. ஆனால் போகப் போக இந்த நடவடிக்கையில் மாற்றம் ஏற்படலாம் எனத் தெரிகிறது. இந்த நிலையில், பிரபல நடிகரும் திமுக ஆதரவாளருமான போஸ் வெங்கட் விஜய் சாதாரண ஆளு இல்லை. அவர் மிகப்பெரிய செட்டப்பில் இருக்கிறார் என்று தெரிவித்துள்ளார்.ஒரு நேர்காணலில், விஜய் கூட்டணியில் இருந்து வெற்றி பெறுவாரா? இல்லை தனித்து நின்றால் வெற்றி பெறுவாரா? திருமா, சீமான், விஜய் மூன்று பேரும் இணைந்து அரசியல் செய்வார்களா? என்று நெறியாளர் கேள்வி எழுப்பினார்.

நடிகர் போஸ் வெங்கட் கூறியுள்ளதாவது;

’’திருமாவளவன், சீமான், விஜய் மூன்று பேரும் இணைந்தால் அதிமுகவின் ஓட்டு வங்கியை காலி பண்ணி விடும். ஆனால், எங்க ஆளுங்கட்சியாக இருக்கும் திமுகவின் ஓட் வங்கியை உடைப்பது கஷ்டம் என்று கூறினார். அதேபோல் திமுகவின் இளைஞர்களின் ஓட்டு விஜய்க்கு செல்லுமா என்றால் போகாது; விஜய் பட ஷூட்டிங் ஒருமுறை நடந்து கொண்டிருக்கும்போது, அருகே திமுக கட்சி மீட்டிங் நடந்து கொண்டிருந்து, திமுகவின் விஜய்யிடம் சென்று கட்சிக் கரை வேட்டியுடன் போட்டோ, செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.எனவே ஓட்டர்ஸ் வேறு, ரசிகர்கள் வேறு. வடிவேலு, குஷ்பு இருவரும் கட்சிக்காக ஓட்டுக் கேட்டனர். ஆனால் அவர்கள் கூறியதை மக்கள் கேட்கவில்லை.


அதேபோல் விஜயைப் பார்க்க எல்லா கட்சியினரும் வருவர். ஆனால் இதை நம்பிவிட்டு இதுதான் அரசியல் என்று நினைக்கக் கூடாது. அரசியல் என்பது மிகப்பலமான எதிர்ப்புகள், மிகப்பலமான அறிக்கைகள், தெருவில் இறங்கிப் போராடுதல் இம்மூன்றும் இருந்தால்தான் தலைவர். திருமா, சீமான், ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகள் செய்வதை விட விஜய் அதிகமாகச் செய்ய வேண்டும். விஜய் பெரிய செட்டப்பில் வைத்து அரசியலில் இறங்கியுள்ளார். நன்றாகப் படித்தவர். அரசியலில் இருந்து தோல்வியடைந்தால் மீண்டும் சினிமாவில் நடிப்பார்’’ என்று தெரிவித்துள்ளார்.

Trending News