புதன்கிழமை, நவம்பர் 27, 2024

மெரினாவில் சாகச நிகழ்ச்சியின்போது 5 பேர் உயிரிழந்தது வேதனையளிக்கிறது.. தவெக தலைவர் விஜய் இரங்கல்

சென்னை மெரினாவில் விமான சாகச நிகழ்ச்சியை பார்க்க சென்ற பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இதுகுறித்து, தமிழக வெற்றிக் கழகம் கட்சித் தலைவர் விஜய் மக்கள் கூடுமிடங்களில் பாதுகாப்பு மற்றும் அத்தியாவசிய தேவைகளில் கவனம் செலுத்த வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

இந்திய விமானப்படையில் 92 வது ஆண்டு தினத்தை முன்னிட்டு நேற்று சென்னை மெரினா கடற்கரையில் விமானப்படையின் சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில், 72 விமானங்கள் மூலம் சாகசங்கள் நிழத்தப்பட்டன. அதன்படி, நேற்று காலை 11 மணி முதல் மதியம் 1 மணிவரை இந்த நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெற்றது.

இதையொட்டி, இந்த அரிய மற்றும் சாகச நிகழ்ச்சியைக் காண்பதற்கு சென்னை மற்றும் அதன் சுற்றுப்பகுதியைச் சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் குவிந்தனர். இதனால் மெரினா கடற்கரையில் மக்கள் கூட்டம் நேற்று அலைமோதியது. இதனால் கூட்ட நெரிசலும் ஏற்பட்டது. இந்த நிகழ்ச்சியை 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் காண குவிந்ததால் பெரும் நெரிசல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

போதிய வசதிகள் இல்லை; 5 பேர் உயிரிழப்பு

அதேசமயம், ஒரே இடத்தில் மக்கள் குவிந்த நிலையில், உணவு, குடிநீர் கழிப்பிட வசதி, போக்குவரத்து, உள்ளிட்டவைகளை சரிவர செய்யப்படவில்லை என புகார் தெரிவித்தனர். இந்த நிலையில் கூட்ட நெரிசலில் சிக்கி 5 பேர் உயிரிழந்த சம்பவரும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெயிலுக்கு போதிய நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், சென்னை கொருக்குப்பேட்டை பகுதியைச் சேர்ந்த ஜான் என்பவர் மெரினா கடற்கரையில் மயக்கமடைந்தார். அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.

மேலும், நேற்றைய நிகழ்ச்சியின் போது 93 பேர் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும், வெயில் தாக்கத்தால் 230 பேர் மயக்கம் அடைந்ததாகவும் இவர்கள் அனைவரும் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளன. இந்த நிலையில், ’’இந்த சாகச நிகழ்ச்சியைப் பார்க்க வந்தவர்களில் 5 பேர் உயிரிழப்பு மற்றும் உடல்நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது. போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை தமிழக அரசு மேற்கொள்ளவில்லை’’ என எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

தற்போது முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று உயிரிழந்த 5 பேரின் குடும்பத்தினருக்கு பொதுநிதியில் இருந்து தலா ரூ. 5 லட்சம் நிவாரண உதவி வழங்க உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில், நேற்று மெரினா கடற்கரையில் பார்வையாளர்கள் 5 பேர் உயிரிப்பு மற்றும் பாதுகாப்பு குறைபாடு, போதிய வசதிகள் இல்லாதது பற்றி எதிர்க்கட்சிகள் திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றன இந்த நிலையில் தவெக தலைவர் விஜய் தன் எக்ஸ் தள பக்கத்தில் உயிரிழந்த 5 பேரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து விஜய் பதிவிட்டுள்ளதாவது:

’’சென்னையில் இந்திய விமானப் படை சார்பில், மெரினா கடற்கரையில் நடைபெற்ற சாகச நிகழ்ச்சியின் போது 5 பேர் உயிரிழந்த நிகழ்வு, வேதனையளிக்கிறது. அவர்களது குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்நிகழ்ச்சியின் போது, அடிப்படை வசதிகள், போக்குவரத்து வசதிகள் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்டவை மீது அரசு போதுமான கவனம் செலுத்தவில்லை என்று நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பொதுமக்கள், தங்கள் வேதனையை வெளிப்படுத்திய செய்திகள் ஊடகங்களில் வந்துள்ளன.

இப்படி மக்கள் அதிக அளவில் கூடுகிற இடங்களில் அடிப்படை மற்றும் அத்தியாவசியத் தேவைக்கான வசதிகளையும் பாதுகாப்பையும் திறம்படச் செயல்படுத்துவதில், இனி வரும் காலங்களில் கவனம் செலுத்த வேண்டும் எனத் தமிழக அரசைக் கேட்டுக்கொள்வதாகத்’’ தெரிவித்துள்ளார்.

- Advertisement -spot_img

Trending News