புதன்கிழமை, அக்டோபர் 30, 2024

நீதியை கொடுப்பது சட்டமா, தனிநபரா.? வேட்டையன் சொல்வது என்ன, முழு விமர்சனம்

Vettaiyan Movie Review: லைக்கா தயாரிப்பில் ரஜினி நடித்துள்ள வேட்டையன் இன்று திரையரங்குகளை ஆக்கிரமித்துள்ளது. ஜெய் பீம் ஞானவேல் இயக்கத்தில் அமிதாபச்சன், மஞ்சு வாரியர், பகத் பாசில், ரித்திகா சிங், ராணா, துஷாரா என பலர் இப்படத்தில் இணைந்துள்ளனர்.

பெரும் ஆர்வத்தை தூண்டி இருந்த இப்படம் ஒரு சாயலில் ஜெயிலர் போல் இருக்குமோ என்ற சந்தேகம் ரசிகர்களுக்கு இருந்தது. அது உண்மையா? படத்தின் கதை என்ன? ஆடியன்ஸை இம்ப்ரஸ் செய்தாரா ஞானவேல்? என்பதை விமர்சனத்தின் மூலம் இங்கு காண்போம்.

கதையின் மையக்கரு

என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் ஆக இருக்கும் ரஜினி பாராபட்சம் பார்க்காமல் ரவுடிகளை சுட்டு தள்ளுகிறார். அப்போது நேர்மையான அரசு பள்ளி ஆசிரியராக இருக்கும் துஷாரா கொடூரமான முறையில் கொலை செய்யப்படுகிறார்.

அந்த வழக்கு விசாரணைக்கு வரும் நிலையில் குற்றவாளியை காப்பாற்றுவதற்காக தவறான கோணத்தில் செல்கிறது. அது தெரியாத ரஜினி கடைசி நேரத்தில் உள்ளே வந்து சம்பந்தமில்லாத ஒருவரை என்கவுண்டர் செய்து விடுகிறார்.

இதை மனித உரிமை அதிகாரியும் நீதிபதியுமாக இருக்கும் அமிதாப் பச்சன் தன் குழுவினருடன் விசாரணை செய்கிறார். இறுதியில் உண்மையான குற்றவாளி யார்? துஷாராவின் மரணத்திற்கு நீதி கிடைத்ததா? அவருடைய மரணம் எதற்காக? ரஜினி என்ன செய்தார்? அமிதாப்பச்சனின் தீர்ப்பு என்ன? போன்ற கேள்விகளுக்கு விடை அளிக்கிறது வேட்டையன்.

திரைக்கதையும் நடிப்பும்

ஒரு சமுதாய பிரச்சனையை கமர்சியலாக கொண்டு சென்று பாராட்டை வாங்கி இருக்கிறார் ஞானவேல். அவரைத் தவிர வேறு யாராலும் இந்த அளவுக்கு எடுத்திருக்க முடியாது என சொல்லும் அளவுக்கு இருக்கிறது திரைகதை.

அதற்கு ரஜினியின் மாஸ் யானை பலமாக அமைந்துள்ளது. போலீஸ் அதிகாரியாக அவருடைய நடை உடை பாவனை என அனைத்துமே வேற லெவல் .இதுவரை அவர் பல போலீஸ் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். ஆனாலும் ஒவ்வொன்றிலும் தனி ஸ்டைல் தெரிகிறது.

அடுத்தபடியாக அமிதாப் பச்சன் என்கவுண்டருக்கு எதிரான மனப்பான்மை கொண்டவராக தன் கேரக்டரை நிலை நிறுத்தி இருக்கிறார். ரஜினிக்கும் அவருக்கும் நடக்கும் வாக்குவாதங்கள் தொடர்பான காட்சி படத்தின் பெரும் ஹைலைட்.

அதைத்தொடர்ந்து ரஜினி கூடவே வரும் பகத் பாஸில் புது பரிமாணத்தை காட்டி இருக்கிறார். அவர் வரும் காட்சிகள் எல்லாம் சிரிப்புக்கு கேரண்டி. அதே போல் ரித்திகா சிங் கம்பீரமான நடிப்பை கொடுத்துள்ளார்.

மேலும் துஷாராவின் கதாபாத்திரமும் அவருடைய நடிப்பும் கைத்தட்டலை பெற்றுள்ளது. அடுத்தபடியாக ரஜினியின் மனைவியாக வரும் மஞ்சு வாரியருக்கு முதல் பாதியில் பெரிய அளவில் வேலை இல்லை ஆனால் இரண்டாம் பாதியில் ஸ்கோர் செய்துவிட்டார்.

நிறை குறைகள்

இப்படி கதாபாத்திரங்கள் தங்களுடைய வேலையை கச்சிதமாக செய்துள்ளனர். இது எல்லாவற்றுக்கும் மேலாக அனிருத்தின் இசை சிறப்பு. அதிலும் மனுசிலாயோ பாடல் விஷுவல் ட்ரீட் தான். மேலும் சமூகத்திற்கு தேவையான அழுத்தமான வசனங்களும் பெரும் பலம்.

இப்படி பல நிறைகள் இருந்தாலும் சிறு குறைகளையும் பார்க்க முடிகிறது. சில இடங்களில் வசனம் ஒட்டாதது போல் இருக்கிறது. ஆனால் அதையெல்லாம் தாண்டி படத்தில் சொல்லப்பட்ட நீதி ஏற்றுக் கொள்ளும் படியாக இருக்கிறது. ஆக மொத்தம் வேட்டையன்-தரமான சம்பவம்.

சினிமா பேட்டை ரேட்டிங்: 3.75/5

- Advertisement -spot_img

Trending News