Chennai Rain: அக்டோபர் மாதம் வந்தாலே எப்போது மழை வரும் என்று சொல்ல முடியாது. அதிலும் வருடா வருடம் சென்னை மக்கள்தான் இந்த மழையால் பாதிக்கப்படுவார்கள். அதன்படி டிசம்பர் மாதம் வந்தாலே ஒரு பீதி மனதுக்குள் சொல்லாமல் கொள்ளாமல் வந்து விடும்.
ஆனால் இந்த முறை அக்டோபர் மாதத்திலேயே சென்னை மக்கள் அடை மழையை எதிர்கொள்ள தயாராகி விட்டனர். நாளையிலிருந்து அடுத்த நான்கு நாட்களுக்கு சென்னை மக்கள் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
அதேபோல் கனமழை நாளையிலிருந்து தொடங்கும் என வெதர்மேன் தெரிவித்துள்ளார். இதனால் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கிறது. அதேபோல் ஐடி பணியாளர்கள் கூட வீட்டிலிருந்து வேலை செய்யவும் என முதல்வர் கேட்டுக் கொண்டுள்ளார்.
அது மட்டும் இன்றி மக்கள் தாழ்வான பகுதியில் இருந்தால் உடனடியாக நிவாரண முகாம்களுக்கு வரவேண்டும். தேவையில்லாமல் கடலோர பகுதிகளுக்கு செல்லக்கூடாது. மழை ஆரம்பித்த பிறகு மக்கள் அனாவசியமாக வீட்டை விட்டு வெளியில் வர வேண்டாம் எனவும் அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனால் இப்போது சென்னை ஒரே பரபரப்பாக இருக்கிறது. வேளச்சேரி மேம்பாலத்தில் இப்போது பலரும் கார்களை பார்க் செய்ய தொடங்கிவிட்டனர். ஆனால் இங்கு நிறுத்தக்கூடாது அபராதம் விதிப்போம் என போலீசார் எச்சரித்து வருகின்றனர்.
அதையெல்லாம் காதில் வாங்காத மக்கள் அபராதம் வேணும்னாலும் கொடுத்துகிறோம் என அசால்ட் செய்து வருகின்றனர். அதைத்தொடர்ந்து சூப்பர் மார்க்கெட்டுகளில் பால் முட்டை பிரெட் நூடுல்ஸ் போன்ற பொருட்களை வாங்குவதற்கும் கூட்டம் அலைமோதி கொண்டிருக்கிறது.
இல்லத்தரசிகள் வீடுகளில் அடுத்த நான்கு நாட்களுக்கு தேவைப்படும் மளிகை பொருட்களையும் வாங்கி ஸ்டோர் செய்து வருகின்றனர். இது ஒரு பக்கம் இருக்க எல்லாரும் போட்ல போலாமா என ஒரு பக்கம் அலப்பறையும் செய்து வருகின்றனர்.
மேலும் கடலில் இருந்து 420 மீட்டர் மேல்மட்டத்தில் இருக்கும் கோவையே தற்போது தண்ணீரில் மிதக்கிறது. இதில் கடல் மட்டத்திலேயே இருக்கும் சென்னை என்ன ஆகப்போகுதோ என்ற மீம்ஸ்களும் வைரலாகி வருகிறது. இப்படி அடைமழையை ஆட்டம் காண வைத்து வருகின்றனர் சென்னை வாசிகள்.