செவ்வாய்க்கிழமை, அக்டோபர் 22, 2024

விமல் பேசும் அரசியல் ஒர்க் அவுட் ஆனதா.? சார் பட முழு விமர்சனம்

Sir Movie Review: போஸ் வெங்கட் இயக்கத்தில் விமல், சரவணன், சாயா கண்ணன், சிராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் சார் இன்று வெளியாகி இருக்கிறது. ஒரு தரமான வெற்றிக்காக போராடி வரும் விமலுக்கு இப்படம் கை கொடுத்ததா என்பதை ஒரு விமர்சனத்தின் மூலம் காண்போம்.

கதை கரு

1950 முதல் 80 வரை நடக்கும் கதையாக படம் நகர்கிறது. மாங்கொல்லை என்னும் கிராமத்தில் தன் தந்தை கட்டிய பள்ளியை நடுநிலைப் பள்ளியாக மாற்றி ஆசிரியராக இருக்கிறார் சரவணன். அவருடைய மகனாக வரும் விமல் அப்பள்ளியை எடுத்து நடத்த வேண்டும் என்பது அவரின் ஆசை.

தனக்கு பிடிக்காத போதும் அப்பாவுக்காக வேண்டா வெறுப்பாக சொந்த ஊருக்கு வருகிறார் விமல். அதே சமயம் ஊரில் இருக்கும் ஆதிக்க வர்க்கத்தினர் பள்ளியை அவர் எடுத்து நடத்துவதை விரும்பவில்லை. தாழ்த்தப்பட்ட மக்கள் படிக்க சென்றால் நமக்கு அடிமைகள் கிடைக்க மாட்டார்கள் என அதை தடுக்கின்றனர்.

இதற்காக கடவுளின் பெயரைச் சொல்லி மக்களுக்கு பயத்தை ஏற்படுத்துகின்றனர்.இதை விமல் எவ்வாறு எதிர்கொண்டார்? சரவணன் இன் ஆசை நிறைவேறியதா? பள்ளியை விமல் தொடர்ந்து நடத்தினாரா? என்ற கேள்விகளுக்கு விடை அளிக்கிறது இப்படம்.

நிறை குறைகள்

சமீப காலமாக ஆதிக்க அரசியல் பற்றி வெளிப்படையாக பேசும் படங்கள் அதிகமாக வர தொடங்கிவிட்டது. நந்தன் வாழை வரிசையில் சார் படத்திலும் போஸ் வெங்கட் அதைத்தான் பேசியிருக்கிறார். இதற்கு உயிர் கொடுப்பது போல் தன்னுடைய குறைவில்லாத நடிப்பை வழங்கி இருக்கிறார் விமல்.

வாகை சூட வா படத்திற்கு பிறகு மீண்டும் ஒரு ஆசிரியர் கதாபாத்திரத்தில் அவர் கலக்கியிருக்கிறார். காதல் காமெடி சோகம் என அனைத்திலும் கதையை தாங்கிப் பிடித்திருக்கிறார். அவருக்கு அடுத்தபடியாக சரவணன், சிராஜ் கதாபாத்திரங்களும் நேர்த்தியாக இருக்கிறது.

முதல் பாதியில் காதல், ரொமான்ஸ் என செல்லும் படம் இரண்டாம் பாதியில் சரியான பாதைக்கு திரும்புகிறது. இருந்தாலும் உணர்வுபூர்வமான காட்சிகளுக்கு இயக்குனர் இன்னும் கொஞ்சம் முக்கியத்துவம் கொடுத்திருக்கலாம்.

அதேபோல் இசை படத்தில் ஒட்டாதது போன்ற உணர்வை கொடுத்திருக்கிறது. இருப்பினும் இயக்குனர் பேச வந்த அரசியலை சரியாக சொல்லி இருக்கிறார். மூடநம்பிக்கையை ஓரம் கட்டி கல்விதான் முக்கியம் என தெளிவாக காட்டி இருக்கும் இப்படத்தை தாராளமாக பார்க்கலாம்.

சினிமா பேட்டை ரேட்டிங்: 2.5/5

- Advertisement -spot_img

Trending News