Thalapathy Vijay: செய்வன திருந்த செய் என்று சொல்வார்கள். அதை சரியாக செய்து வருகிறார் தளபதி விஜய். தன்னுடைய அரசியல் அறிவிப்பில் இருந்து, கட்சியின் முதல் மாநாடு வரை எதுவுமே சொதப்ப கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக செயல்பட்டு வருகிறார்.
மாநாட்டிற்கு எந்த விதத்தில் எல்லாம் பிரச்சனை வரும், மாநாடு நடந்து கொண்டிருக்கும்போது என்னென்ன சிக்கல்கள் வரும் என்பதை முன்னமே யூகித்து அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கி விட்டிருக்கிறார்.
சமீபத்தில் இந்த மாநாட்டிற்கான பந்தக்கால் நடும் விழாவே ஒரு மினி மாநாடு போலத்தான் நடைபெற்றது. வரும் 27ஆம் தேதி தமிழக வெற்றி கழகம் கட்சியின் முதல் மாநாடு நடைபெற இருக்கும் நிலையில் கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் கட்சியின் நிர்வாகிகள் பரபரப்பாக பணிகளை தொடர்ந்து நடத்தி வருகிறார்கள்.
புஸ்ஸி ஆனந்த் ஒவ்வொரு மாவட்டமாக சென்று நிர்வாகிகளை சந்தித்து மாநாட்டிற்கு வரும் மக்களை ஒருங்கிணைக்கும் எல்லா வேலைகளையும் செய்து வருகிறார்கள். இந்த நிலையில் தளபதி விஜய் மாநாடு குறித்து இன்று தன்னுடைய இரண்டாவது கடிதத்தை வெளியிட்டு இருக்கிறார்.
இந்த கடிதத்தில் குறிப்பிட்ட சிலரை மாநாட்டில் பங்கேற்க வேண்டாம் என கேட்டுக் கொண்டிருக்கிறார். விஜய் எழுதியிருக்கும் கடிதத்தில், என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களே, வணக்கம், மாநாடு குறித்த இரண்டாவது கடிதம் இது.
மாநாட்டு பணிகளுக்கான குழுக்களும் தொகுதி பொறுப்பாளர்கள் பட்டியலும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நம் முதல் மாநில மாநாடு வெற்றி கொள்கை திருவிழாவின் ஏற்பாடுகளில் நீங்கள் தீவிரமாக இருப்பதும் எனக்கு தெரியும்.
அரசியலை வெற்றி தோல்வி மட்டுமே அடிப்படையாகக் கொண்டு அளவிடாமல் ஆழமான அகவுணர்வாகவும், கொள்கை கொண்டாட்டமாகவும் அணுகப்போகும் நம்முடைய அந்தத் தருணங்கள் மாநாட்டில் மேலும் அழுகுற அமையட்டும். உற்சாகமும் உண்மையான உணர்வும் தவழும் உங்கள் முகங்களை மாநாட்டில் காண போகும் அந்த தருணங்களுக்காகவே என் மனம் காத்திருக்கிறது.
இந்த நெகிழ்வான நேரத்தில் முக்கியமான ஒரு வேண்டுகோளை வைக்க விரும்புகிறேன். கழகத் தோழர்கள் எல்லோரையும் போலவே கர்ப்பிணிப் பெண்கள், பள்ளிச் சிறுவர் மற்றும் சிறுமியர், நீண்ட காலமாக உடல் நலம் என்று இருப்பவர்கள், முதியவர்கள் பலரும் தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் இருந்து நம் மாநாட்டுக்கு வர திட்டமிட்டு இருப்பர்.
அவர்களின் அந்த ஆவலை நான் மிகவும் மதிக்கிறேன். உங்கள் எல்லோருடனும் அவர்களையும் மாநாட்டில் காண வேண்டும் என்ற ஆவல் எனக்கும் இருக்கிறது. ஆனால் எல்லாவற்றையும் விட அவர்களின் நலனே எனக்கு மிக மிக முக்கியம்.
மாநாட்டிற்காக அவர்கள் மேற்கொள்ளும் நீண்ட தூர பயணம், அவர்களுக்கு உடல் ரீதியாக சிரமத்தை ஏற்படுத்தக்கூடும் அதனால் அவர்கள் இவ்வளவு தூரம் சிரமப்பட்டு வரவேண்டாம் என்று அவர்களின் குடும்ப உறவாகவும் இருக்கும் உரிமையில் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என தளபதி அன்பு கட்டளை இட்டிருக்கிறார். அது மட்டும் இல்லாமல் வி சாலை என்னும் விவேகசாலையில் சந்திப்போம் என்று சொன்னேன் அந்த கடிதத்தை முடித்திருக்கிறார்.