Thalapathy Vijay: தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு நாளை நடைபெற இருக்கிறது. ஒட்டுமொத்த தமிழக அரசியல் தலைவர்களின் பார்வையும் கடந்த சில தினங்களாக தளபதியின் மீதுதான் இருக்கிறது. மாநாட்டை எப்படி நடத்தப் போகிறார், மாநாட்டில் என்ன பேசப் போகிறார் என்பதுதான் இப்போதைக்கு பெரிய எதிர்பார்ப்பு.
நடிகர் விஜயும் தன்னுடைய முதல் அரசியல் மாநாட்டில் சின்ன ஒரு தவறு கூட நடந்து விடக்கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக செயல்பட்டு வருகிறார். இந்த மாநாட்டு நிகழ்ச்சிக்கு நடந்து கொண்டிருக்கும் முன்னேற்பாடுகளை பார்க்கும் போதே எந்த அளவுக்கு தரமாக ஸ்கெட்ச் போட்டு விஜய் அரசியலுக்குள் நுழைந்து இருக்கிறார் என்பது தெரிகிறது.
கடந்த சில தினங்களாக மாநாட்டு திடலில் நிறைய அரசியல் தலைவர்களின் பேனர்கள் மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர்களின் பேனர்களும் வைக்கப்படுகிறது. பொதுவாக ஒரு கட்சி மாநாடு என்றால் அந்த கட்சியை உருவாக்கியவர் அவர் பின்னால் அதை வழி கொண்டு நடத்தி வருபவர்கள் இவர்களுடைய புகைப்படங்கள் தான் இடம் பெறும்.
தெளிவில்லாத அரசியல் பாதையில் பயணிக்கிறாரா தளபதி?
அப்படி பார்த்தால் தமிழக வெற்றிக்கழகம் மாநாடு நடக்கும் திடலில் தலைவர் விஜய் பேனர் மட்டும் தான் இருக்க வேண்டும். ஆனால் இங்கே பெரியார், அம்பேத்கார், காமராஜர், அஞ்சலை அம்மாள் வேலு நாச்சியார் என நாளுக்கு நாள் பேனர் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
போதாத குறைக்க நேற்று தலையின் ரசிகன், தளபதியின் தொண்டன் என்ற பெயரில் அஜித்தும் அந்த பேனர் கூட்டத்தில் இணைந்து இருக்கிறார். மக்களுக்கு இந்த பேனர்கள் ஒருவித குழப்பத்தை தான் ஏற்படுத்தி இருக்கிறது.
தமிழகத்தை பொறுத்த வரைக்கும் திராவிட அரசியல், திராவிடத்தை எதிர்க்கும் அரசியல், தன்னுடைய ஜாதி மக்களுக்காக போராட களமிறங்கும் அரசியல் கட்சிகள் தான் இருக்கிறது. ஆனால் இது எல்லாம் சேர்ந்த கலவையாக விஜய் தன்னை முன்னிறுத்துகிறார்.
திராவிட அரசியல் வேண்டுமா பெரியார் இருக்கிறார், தேசியம் வேண்டுமா காமராஜர் இருக்கிறார், தலித் அரசியல் வேண்டுமா அம்பேத்கர் இருக்கிறார், வன்னியர் அரசியல் வேண்டுமா அஞ்சலை அம்மாள் இருக்கிறார், முக்குலத்தோருக்கு வேலுநாச்சியார் இருக்கிறார் என வாரிசு பட சமயத்தில் தில்ராஜ் பேசிய வசனம் தான் ஞாபகம் வருகிறது.
போதாத குறைக்கு மற்ற ஹீரோக்களின் ரசிகர்கள் இந்த மாநாட்டு திடலில் பேனர் வைப்பது, சமூக வலைத்தளத்தில் அரசியல் என்று வந்துவிட்டால் விஜய்க்கு தான் ஆதரவு என பேசுவது எல்லாமே விஜய் தரப்பில் இருந்து நடைபெறுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. தெளிவான அரசியல் பாதையை நோக்கி விஜய் பயணிக்கிறாரா என்பது அவருடைய முதல் மாநாட்டு பேச்சில் தான் தெரியும்.