ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 24, 2024

ஒட்டும் வேண்டாம் உறவும் வேணாம்.. தவெகவின் கொள்கைகள் மீது சீமான் கடும் விமர்சனம்

தமிழக அரசியலில் புதிய பாய்ச்சலை தொடங்கியிருப்பவர் விஜய். கடந்த பிப்ரவரியில் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கியவர் சமீபத்தில் அக்கட்சியின் கொடியையும், கொடிப்பாடலையும் அறிமுகம் செய்தார். அதன்பின், கடந்த அக்டோபர் 27 ஆம் தேதி விழுப்புரம், விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் தனது முதல் மாநாட்டை வெற்றிக் கொள்கைத் திருவிழா என்ற பெயரில் நடத்தினார்.

ஏற்கனவே அவர் கட்சியைத் தொடங்கிய குறுகிய காலத்திலேயே 80 லட்சம் பேர் அவரது கட்சியில் உறுப்பினர்களாகச் சேர்ந்திருப்பதாக தகவல் வெளியான நிலையில், தவெக முதல் மாநாட்டில் 8 லட்சம் முதல் 10 லட்சம் தொண்டர்கள் பங்கேற்றதாக தகவல் வெளியானது.

இது சமீபத்திய அரசியல் மாநாடுகளில் கூடிய அதிகபட்ச கூட்டம் என்பதால் தமிழக வெற்றிக் கழகத்தின் மீது மொத்தக் கவனமும் குவிந்துள்ளது. இது விஜய் தனது பலத்தை நிரூபிக்க கூட்டிய கூட்டம் என திராவிட அரசியல் கட்சி தலைவர்கள் விமர்சித்து வருகின்றனர்.

திராவிடமும், தமிழ்தேசியமும் இரண்டு கண்கள்- விஜய் பேச்சு

அதேசமயம், தவெக மாநாட்டில் விஜய், என் கேரியரின் உச்சத்தை உதறிவிட்டு, உங்களுக்காகவே உழைக்க வருகிறேன். திருவள்ளுவர் வழியில், நம் வெற்றிக் கழகத்தின் கொள்கைத் தலைவர்களாக பெரியார், காமராஜர், அம்பேத்கர், வேலுநாச்சியார், அஞ்சலை அம்மாள் ஆகியோரை நம் அரசியல் வழிகாட்டிகளாக ஏற்று சாதி, மத, பாலின பாகுபாடுகள் இல்லா சமத்துவ, சமுதாயத்தை உண்டாக்க மதச்சார்பற்ற சமூக நீதிக் கொள்கைகளை நம்ம தமிழக வெற்றிக் கழகத்தின் வழியாக உங்களுக்காக உழைக்க வருகிறேன் என்றார்.

மேலும், கொள்கை கோட்பாடு அளவில் திராவிடத்தையும், தமிழ்த்தேசியத்தையும் நாம் பிரித்துப் பார்க்கப் போவதில்லை., திராவிடமும், தமிழ்தேசியமும் இந்த மண்ணின் இரண்டு கண்கள் என்பது தமது கருத்து என பேசியிருந்தார்.

விஜயின் கொள்கைகள், அவரது அன்றைய பேச்சு இதெல்லாம் ஒரு சினிமா வசன ஸ்கிரிப்ட் எனவும், அவர் கொள்கைத் தெளிவில்லாமல் பேசுவதாகவும் அரசியல் தலைவர்கள் விமர்சித்தனர். இந்த நிலையில் தவெக மாநாட்டிற்கு முன்பு வரை விஜய்க்கும் அவரது கூட்டணிக்கும் ஆதரவு அளித்து வந்த சீமான் விஜய்யின் பேச்சுக்கு கடுமையான விமர்சனம் தெரிவித்துள்ளார்.

தவெக தலைவர் விஜய்க்கு சீமான் கேள்வி

தமிழ்நாடு நாளை ஒட்டி சென்னையில் நேற்று நடந்த நாதக பொதுக்கூட்டம் நடந்தது. இதில், பங்கேற்ற சீமான், திராவிடமும் தமிழ்த்தேசியமும் ஒன்றா ப்ரோ? என தவெக தலைவர் விஜய்க்கு சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது;

திராவிடமும் தமிழ் தேசியமும் ஒன்று என்று கூறுகிறார். அவர் ஒன்று ஆற்றில் கால் வைக்கனும், இல்லையென்றால் சேற்றில் கால் வைக்கனும். இதென்ன ப்ரோ ரெண்டிலும் கால் வைப்பது. நீங்கள் கூறுவது கொள்கையே அல்ல. வாட் ப்ரோ. இட்ஸ் வெரி ராங் ப்ரோ. ஒரு சாலையில் இடதுபுறம் அல்லது வலதுபுறம் நிற்கனும், நடுவில் நின்றால் லாரி மோதிவிடும்.

நான் ஏசி அறையில் இருந்து சிந்தித்து வந்தவன் இல்லை. கொடும் சிறையில் இருந்து வந்தவன். நான் குட்டிக் கதை சொல்பவன் அல்ல தம்பி. வரலாற்றைக் கற்பிக்க வந்தவன். இனிமேல் நீங்கள்தான் பெரியார், அம்பேத்கர் எல்லாம் படிக்கனும், நாங்கள் அதில் படித்து பிஹெச்டி வாங்கிவிட்டோம். சினிமாவில் பேசுவது போன்ற பஞ்ச் டயலாக் எல்லாம் இல்லை தம்பி இது. இது நெஞ்சு டயலாக். எங்கள் லட்சியத்திற்கு எதிராக பெற்ற தந்தையே வந்தாலும் எதிரிதான் அதில் தம்பியும் இல்லை, அண்ணனும் இல்லை’’ என்று தெரிவித்துள்ளார்.

விஜய் பதிலடி கொடுப்பாரா?

ஏற்கனவே திராவிட கட்சிகளை வெளுத்து வாங்கிய விஜய், திமுக வாரிசு அரசியல் செய்கிறது என விமர்சித்திருந்தார். இந்த நிலையில் விஜய்யின் கருத்துக்கு நாம் தமிழர் கட்சியும் கடுமையான விமர்சித்துள்ளது. காலை வைக்கிற இடமெல்லாம் கன்னிவெடியா என்ற வடிவேலு வசனம் போல் விஜய் படங்கள் வெளியாகிற போதே ஏகப்பட்ட விமர்சனம் சந்திக்கும், இதில் அவர் அரசியல் வருகையும், அவர் பேச்சுகளும், ட்ரோல் ஆகி விமர்சனத்திற்குள்ளான நிலையில், விஜய்யை ஆதரித்து வந்த சீமானே தற்போது விமர்சித்துள்ளது அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு விஜய் பதிலடி கொடுப்பார் என கூறப்படுகிறது.

- Advertisement -spot_img

Trending News