செவ்வாய்க்கிழமை, நவம்பர் 5, 2024

விஜய் கட்சி தவெக-வுடன் கூட்டணியா? விசிக கட்சியின் எதிர்காலம் என்னாகும்?

தமிழக வெற்றிக் கழகத்துடன் விசிக கூட்டணி சேர்ந்தால் என்னவாகும் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வரும் நிலையில், ஒருவேளை இப்படி நடந்தால் திமுக என்ன செய்யும் என்பது பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு அரசியல் என்பது மற்ற மாநிலங்களைப் போல் இல்லை. 50 ஆண்டுகளுக்கும் மேலாக திராவிட கட்சிகளில் ஆளுகையிலும், ஆட்சியிலும்தான் உள்ளது. புதிய புதிய கட்சிகள் எல்லாம் எத்தனை தூரம் போராடிப் பார்த்தும் இன்னும் திமுக, அதிமுக ஆகிய கட்சிகளின் இடத்தைப் பிடிக்க முடியவில்லை.

ஏனென்றால் இங்குள்ள மக்கள் திராவிட கட்சிகளின் வேர்களைக் கொண்டவர்கள் என்பது எல்லோருக்கும் நன்றாகத் தெரியும். இந்த நிலையில், புதிய தமிழகம், விடுதலை சிறுத்தைகள், பாமக, தேமுதிக, ஐஜேகா, தமிழக வாழ்வுரிமை கட்சிகள் ஏற்கனவே புதிய கட்சிகளாக திராவிட கட்சிகளுக்கு மாற்றாகத் தோன்றினாலும் அவை திராவிட கட்சிகளுடன் கூட்டணி அமைத்தே தேர்தலில் போட்டியிடுகின்றன. இப்போது சில கட்சிகள் பாஜகவுடன் கூட்டணியில் உள்ளன.

இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகம் யாருடன் கூட்டணி என்பதை தெளிவுபடுத்தவில்லை என்றாலும் தம் கொள்கைகளையும், தங்களின் எதிர்பாளர்களையும் அக்கட்சித் தலைவர் விஜய் முதல் மாநாட்டிலேயே மேடையில் பேசியிருந்தார். இதற்கு சீமான், திமுகவினர், பாஜகவினர் உள்ளிட்டோர் விஜய்க்கு எதிர்ப்பும் விமர்சனமும் தெரிவித்தனர்.

அதேசமயம் அதிகாரத்தில் அனைவருக்கும் சமமான பங்கு என விஜய் கூறியது பற்றி பல கட்சித் தலைவர்கள் கூட்டணிக்காக பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது. இருப்பினும் முக்கிய கட்சிகளுக்கு இணையாக கூடிய கூட்டத்தைப் பார்த்து விஜயின் செல்வாக்கை யாரும் குறைத்து மதிப்பிடவில்லை என தெரிகிறது. அதனால் வரும் 2026 தேர்தலுக்கு விஜய்யுடன், ஏற்கனவே திமுக கூட்டணில் உள்ள விசிக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி சேருமா? என கேள்வி எழுந்துள்ளது.

நூல் வெளியீட்டு விழாவில் விஜய்

அதன்படி, வரும் டிசம்பர் 6 ஆம் தேதி அர்ஜூனா தொகுத்து தயாரித்திருக்கும் நூல் வெளியீட்டு விழாவில் விஜயுடன் திருமாவளவன் பங்கேற்கவிருக்கிறார். இவ்விழாவில் தவெகவுடன், விசிக கைகோர்க்குமா என கேள்வி எழுந்துள்ளது. அதேசமயம் அதிகாரத்தில் அனைவருக்கும் சமமான பங்கு என்பது அடிப்படை உரிமை என்று விஜய் முதல் மாநாட்டில் பேசியதை விசிகவில் சிலர் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

தவெகவுடன் கூட்டணி குறித்து திருமாவளவன் நிலைப்பாடு!

திமுக கூட்டணிக்கு எதிராக ஆதவ் அர்ஜூனா உள்ளிட்டோர் இருந்தாலும், அக்கூட்டணிக்கு ஆதரவாக எம்.பி., ரவிக்குமார், எம்.எல்.ஏக்கள் சிந்தனை செல்வன், ஆளூர் ஷா நவாஸ் உள்ளிட்டோர் இருப்பதால் ஒருவேளை விசிக, விஜய் கட்சிக்கு ஆதரவு அளித்து, தவெகவுடன் கூட்டணி அமைத்தால் நிச்சயம் விசிக உடையும் அல்லது திமுகவே விசிகவை உடைக்கும் எனவும், முக்கிய நிர்வாகிகள் பலமிக்க திமுகவுக்கு ஆதரவான நிலைப்பாட்டில் அக்கட்சியில் இணையவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், ஆளுங்கட்சியாக இருக்கும் திமுகவுக்கே விசிக ஆதரவு இருக்கும் எனவும், வரும் தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது பற்றி தேர்தல் நேரத்தின்போது அக்கட்சித் தலைவர் திருமாவளவன் ஆலோசித்துத்தான் முடிவெடுப்பார் என தகவல் வெளியாகிறது.

- Advertisement -spot_img

Trending News