சினிமாவில் படமெடுப்பது ஒன்றும் லேசுப்பட்ட காரியமில்லை என்று கூறுவர். அந்தளவுக்கு அது சிறிய பட்ஜெட் படமென்றாலும், பெரிய பட்ஜெட் படமென்றாலும் 24 துறைகள் சார்ந்த பணியாளர்களின் துணையுடன் அப்படம் பொருட்செலவில் உருவாகி, அது ஷூட்டிங் முடிக்கப்பட்டு, எடிட்டி, டப்பிங் என போஸ்ட் புரடக்சன் பணிகள் முடிந்த பின், ரிலீஸூக்கு முன் விளம்பரம் செய்யப்பட்டு, பல பகுதிகளில் அப்படம் விநியோகஸ்தர்களால் வாங்கப்படுகிறது.
அப்படி இத்தனையும் சிறப்பாக நடந்தாலும் அப்படத்தின் கதை, நடிகர்களின் நடிப்பு இவையெல்லாம் நன்றாக இருந்தால்தான் இக்காலத்தின் புத்திசாலித்தனமான உள்ள ரசிகர்களின் மத்தியில் படம் ஓடும். இல்லையென்றால் அது தயாரிப்பாளருக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தும்.
டோலிவுட், பாலிவுட்டில் அடிக்கடி ரூ.1000 கோடி வசூல்
இந்தியாவில் பாலிவுட், டோலிவுட், கோலிவுட் ஆகிய துறைகள்தான் பெரியளவில் படமெடுக்கப்பட்டு, அதிக பட்ஜெட் செலவிடப்பட்டு, சினிமாக்கள் தயாராகி வருகின்றன. ஆனால், பாலிவுட் – இந்தி சினிமாவில் தங்கல் படத்தைத் தொடர்ந்து, ஜவான், பதான் ஆகிய படங்கள் ரூ. 1000 கோடி வசூல் குவித்தன.இதையடுத்து, டோலிவுட் என்றழைக்கப்படும் தெலுங்கு சினிமாவில் பாகுபலி படத்தைத் தொடர்ந்து, ஆர்.ஆர்.ஆர், சமீபத்தில் வெளியான கல்கி ஏடி படமும் ரூ.1000 கோடி வசூலித்து சாதனை படைத்தன.
ஆனால் தமிழ் சினிமாவில் ரஜினியின் 2.0 படம்தான் ரூ.800 கோடி செலவில் வசூலித்து முதலிடத்தில் உள்ளது. இதையடுத்து ஜெயிலர் 660 கோடி, லியோ, 600 கோடிக்கு மேல் வசூலித்தன. ஆனால், இந்தியாவில் அதிகளவில் வெளியாகும் தமிழ் சினிமாவில் இன்னும் ஒரு படம் கூட 1000 கோடி கிளப்பில் இணையவில்லை என்பது கேள்வியை எழுப்பியுள்ளது.
இந்த நிலையில், பாலிவுட் சினிமாவில் நடிகர்களுக்கு குறிப்பிட்ட அளவு செலவு செய்யப்பட்டாலும், மீதியை படத்தின் ஆக்கத்திற்கும், விஎஃப்எக்ஸூக்கும் செலவு செய்து ரசிகர்களுக்கு பிரமாண்டத்தை காட்டுகின்றனர் திரையில். அதேபோல், வித்தியாசமான படங்களை எடுத்தாலும், தெலுங்கில் அனைத்து நடிகர்களும் ஒன்றிணைந்து ஆலோசனை மேற்கொண்டு படத்தில் நடிக்க குறிப்பிட்ட தொகை பெற்றுக் கொண்டு படம் வெளியான பின் மீதி சம்பளத்தை நம்பிக்கையுடன் வாங்குகின்றனர்.
மீதியை படத்தின் காட்சிக்கும், பிரமாண்டத்திற்கும் செலவு செய்கின்றனர். இதனால் தெலுங்கு படங்களும், பாலிவுட் படங்களும் பான் இந்தியா படமாக எளிதில் எடுக்க முடிகிறது. அதை வெற்றி பெற வியாபாரமும் செய்கின்றனர். அது மக்களிடம் எடுபடுகிறது. அதனால் வருடம் தவறாமல் பிரமாண்ட படம் ஒன்று பான் இந்திய அளவில் இவ்விரு சினிமாக்களில் இருந்து வெளியாகிறது. ஒரு நடிகரின் படம் ரிலீஸ் என்றால் அப்படம் வெற்றி பெற மற்ற நடிகர்கள் தம் பட ரிலீஸை தள்ளிப் போடுகின்றனர். இதுதான் அப்படங்கள் ரூ.1000 கோடி எளிதாக வசூல் குவிக்கிறது.
தமிழ் படங்கள் 1000 கோடி வசூல் என்பது எட்டாக்கனி!
ஆனால் தமிழில் அப்படியில்லை. நடிகர்களுக்குள் ஒற்றுமையில்லை. ஒவ்வொரு நடிகரும் தங்கள் படம் ரிலீஸீல் கவனமாக இருக்கிறார்களே தவிர, புரடியூசர் போட்ட பணத்தை திரும்ப எடுக்க வேண்டும் என்பதில் அல்ல. இதனால் வியாபாரமும், பிஸினஸும் பாதிக்கப்படுகிறது. அதேபோல் ஒவ்வொரு நடிகரும் தங்கள் ரிலீஸ் சொன்ன தேதியில் வெளியிட முடியாமல் போவதும், அந்த தேதியில் மற்ற நடிகரின் படம் ரிலீஸாவது உள்ளிட்ட குளறுபடியினாலும் தமிழ் படங்கள் 1000 கோடி வசூல் என்பது இன்னும் கனவாகவே இருக்கிறது. அதற்கு பாலிவுட், டோலிவுட் போன்று கூட்டுமுயற்சி இல்லாததே காரணம் என தகவல் வெளியாகிறது.
நடிகர் சங்கம் இருந்தாலும் ஒற்றுமை இல்லாததால்தான் இப்படி நடக்கிறது. இதை பரிசீலனை செய்து, தமிழ் சினிமா நடிகர்கள் இதுபற்றி பேசினால் நிச்சயம் இங்கும் 1000 கோடி கலெக்சன் எளிதாக நடக்கும் என சினிமா விமர்சகர்கள் கூறி வருகின்றனர். சமீபத்தில் கங்குவா படம் அக்டோபர் 10 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு, சூப்பர் ஸ்டாரின் வேட்டையன் ரிலீஸ் அதே தேதியில் என்பதால் கங்குவா படத்தை வரும் நவம்பர் 14 ஆம் தேதி ஒத்திவைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இனிமேலாவது கடைபிடிப்பார்களா
ஒரு படம் மற்ற படங்களுடன் சேர்ந்து ரிலீஸ் ஆவதைவிட, தனியாக ரிலீஸாகும் போது இதற்கு மற்ற நடிகர்களும் ஒத்துழைக்கும்போது போட்டியின்றி அப்படத்திற்கு எளிதில் வசூல் குவியும் என சினிமா விமர்சகர்கள் கூறுகின்றனர். அதற்கு விட்டுக்கொடுத்து, கூட்டுமுயற்சி, குழுவாக இயங்குவதல், சக நடிகர்களுக்கு குரல் கொடுத்தல் உள்ளிட்ட இதையெல்லாம் தமிழ் நடிகர்கள், தயாரிப்பாளர்கள் இனிமேலாவது கடைபிடிப்பார்களா என கேள்வி எழுந்துள்ளது.