Madras Murder: மதராசப்பட்டினம், தலைவா போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் ஏ எல் விஜய் மெட்ராஸ் மர்டர் என்ற பெயரில் வலைத்தொடர் ஒன்றை இயக்கிக் கொண்டிருக்கிறார். இதன் மூலம் நடிகை நஸ்ரியா வலைதொடரில் அறிமுகமாகிறார்.
இந்த வலைத்தொடரின் தலைப்பு மெட்ராஸ் மர்டர் என்று வெளி வரும்போது சென்னையை சுற்றிய ஏதோ ஒரு கொலை பின்னணி என நமக்கு தெரிந்திருக்கும். ஆனால் இது தியாகராஜ பாகவதர் சம்பந்தப்பட்ட கொலை வழக்கு என்பது தற்போது உறுதியாகி இருக்கிறது.
தியாகராஜ பாகவதர் தமிழ் சினிமாவின் முதல் ஹீரோ என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் படப்பிடிப்பு தளத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போதே ஒரு கொலை வழக்கில் கைதாகி இரண்டரை வருடங்கள் ஜெயிலில் இருந்தவர் என்பது தெரியுமா.
தியாகராஜ பாகவதர் – லட்சுமிகாந்தன் கொலை வழக்கு
அதுவும் கலைவாணர் என் எஸ் கிருஷ்ணன் உடன் இணைந்து ஒரு கொலையில் சம்பந்தப்பட்டு தண்டனைக்கு உள்ளாகி இருக்கிறார். லட்சுமி காந்தன் ஒரு பத்திரிக்கையாளர். நடிகர் நடிகைகளை பற்றி அந்தரங்க விஷயங்களை மஞ்சள் பத்திரிக்கையாக வெளியிட்டவர்.
உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தே இந்த மஞ்சள் பத்திரிகையை மூட வைத்தார்கள். அதன் பின்னர் லட்சுமி காந்தன் இந்து நேசன் என்னும் பத்திரிகையை இந்து நேசன் விலைக்கு வாங்கி தன்னுடைய வேலையை செய்து கொண்டிருந்தார்.
இந்த நிலையில் முதல் முறையாக அவர் மீது கத்திக்குத்து முயற்சியை நடந்து அதிலிருந்து தப்பித்தார். இரண்டாவது முயற்சியில் லட்சுமி காந்தனின் உயிர் பிரிந்தது. கொலை வழக்கை தீவிர விசாரிக்கும் பொழுது அதில் சிக்கியவர்கள் தியாகராஜ பாகவதர் மற்றும் என் எஸ் கிருஷ்ணன்.
இரட்டை ஆயுள் தண்டனை கொடுக்கப்பட்ட நிலையில் மேல்முறையீடு செய்ததும், சாட்சிகளில் முன்னுக்குப் பின் முரணாக இருந்ததாலும் இரண்டரை வருடங்களுக்குப் பிறகு இருவரும் சிறையில் இருந்து வெளி வந்தார்கள். சிறைவாசத்திற்கு பிறகு என் எஸ் கிருஷ்ணனுக்கு மீண்டும் சினிமா கை கொடுத்தது.
ஆனால் தியாகராஜ பாகவதரின் சினிமா வாழ்க்கை அஸ்தமனம் ஆகிவிட்டது. அதன் பின்னர் உடல்நலம் சரியில்லாத பாகவதரும் இறந்துவிட்டார். தற்போது இந்த கொலை வழக்கு கதையைத்தான் விஜய் வலைத்தொடராக உருவாக்கி இருக்கிறார்.