சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

விபத்தால் ஏற்படும் திருப்பமும் குழப்பமும்.. மெட்ராஸ்காரன் எப்படி இருக்கு.? விமர்சனம்

Madraskaaran Movie Review: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று வணங்கான், கேம்ஸ் சேஞ்சர் ஆகிய படங்களோடு மெட்ராஸ்காரன் படமும் வெளிவந்துள்ளது. இதன் விமர்சனத்தை இங்கு காண்போம்.

வாலி மோகன் தாஸ் இயக்கத்தில் ஷேன் நிகாம், கலையரசன், நிஹாரிகா உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். சொந்த ஊருக்கு வரும் ஹீரோ சந்திக்கும் பிரச்சனை தான் படத்தின் ஒன்லைன்.

சென்னையில் இருக்கும் ஹீரோ புதுக்கோட்டையில் தன் காதலியை கரம் பிடிக்க இருக்கிறார். திருமணத்திற்கு முதல் நாள் ஹீரோயின் நிஹாரிகாவை பார்ப்பதற்கு காரில் செல்கிறார்.

அப்போது எதிர்பாராத விதமாக கர்ப்பிணி பெண்ணான ஐஸ்வர்யா தாத்தா மீது கார் மோதி விடுகிறது. அதில் குழந்தை இறந்து விட ஹீரோ போலீசில் சரணடைந்து சிறைக்கு செல்கிறார்.

வெளியில் வந்த பிறகு தான் அவருக்கு ஒரு உண்மை தெரிய வருகிறது. அதன் பிறகு என்ன நடந்தது? ஹீரோவின் திருமணம் என்ன ஆனது? என ட்விஸ்ட் வைக்கிறது இப்படம்.

மெட்ராஸ்காரன் விமர்சனம்

சாதாரணமான கதை தான் என்றாலும் திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் நிச்சயம் படம் வேற லெவலில் இருந்திருக்கும்.

ஆனால் தடுமாற்றங்களோடு செல்லும் கதை சுவாரசியத்தை குறைக்கிறது. இருப்பினும் மலையாள ஹீரோ ஷேன் நிஹாம் தன்னுடைய முழு முயற்சியை கொடுத்துள்ளார். அவரின் நடிப்பு சிறப்பு.

அதேபோல் கலையரசன் குழந்தை இறந்த கோபத்தை அப்படியே பிரதிபலித்திருக்கிறார். ஆரம்பத்தில் இருந்து அவருடைய கேரக்டர் முரட்டுத்தனமாகவே காட்டப்பட்டிருப்பதால் அவருடைய நடிப்பும் அதற்கு ஏற்றவாறு உள்ளது.

ஆனால் ஹீரோயின் நடிப்பு எடுபடவில்லை இருந்தாலும் அவருடைய கதாபாத்திரத்தை எதார்த்தமாக இயக்குனர் கொண்டு சென்றுள்ளார். இப்படியாக முன் விரோதம் பழிவாங்கல் என நகரும் கதை கிளைமாக்சில் தட்டு தடுமாறுகிறது. இருந்தாலும் ஒருமுறை பார்க்கலாம்.

சினிமா பேட்டை ரேட்டிங்: 2.25/5

Trending News