வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

சஸ்பென்ஸ் நிறைந்த இன்வெஸ்டிகேஷன் திரில்லர்.. சுந்தர் சி-யின் வல்லான் எப்படி இருக்கு.? முழு விமர்சனம்

Vallan Movie Review: மணி சேயோன் இயக்கத்தில் சுந்தர் சி, தான்யா ஹோப், சாந்தினி, தலைவாசல் விஜய் உட்பட பலர் நடித்திருக்கும் படம் தான் வல்லான். கிரைம் திரில்லர் பாணியில் உருவாகி இருக்கும் இப்படம் இன்று திரைக்கு வந்துள்ளது.

இந்த பொங்கலுக்கு சுந்தர் சி இயக்கிய மதகஜராஜா வெளியாகி பெரும் வெற்றி பெற்றுள்ளது. அந்த கொண்டாட்டங்களுக்கு நடுவில் அவர் நடித்துள்ள படம் வந்துள்ளது.

சமீபத்தில் இதன் ட்ரைலர் வெளியாகி கவனம் பெற்றது. அதை தொடர்ந்து தற்போது பாசிட்டிவ் விமர்சனங்கள் வரும் நிலையில் படம் எப்படி இருக்கிறது என காண்போம்.

சுந்தர் சி-யின் வல்லான் எப்படி இருக்கு.?

போலீஸ் அதிகாரியாக இருக்கும் சுந்தர் சி சில காரணங்களால் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார். அப்போது போலீசுக்கு தண்ணி காட்டும் வகையில் ஒரு கொலை சம்பவம் நடக்கிறது.

காவல்துறை குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாமல் திணறுகிறது. அதனால் உயர் அதிகாரி இந்த வழக்கை சுந்தர் சியிடம் ஒப்படைக்கிறார்.

அதை ஏற்கும் சுந்தர் சி தன்னுடைய பாணியில் விசாரணையை மேற்கொள்கிறார். அதில் பல திடுக்கிடும் திருப்பங்கள் நிகழ்கிறது.

அடுத்தடுத்த கொலை, கொலைக்கு பின்னால் இருக்கும் மர்ம நபர் என சுந்தர் சி எதிர்பாராத விஷயங்கள் நடக்கிறது. அதை எப்படி அவர் சமாளித்தார்? கொலைக்கான காரணம் என்ன? குற்றவாளி யார்? என்பதுதான் படத்தின் கதை.

வழக்கமான இன்வெஸ்டிகேஷன் திரில்லர் கதைதான். ஆனாலும் சஸ்பென்ஸ் கலந்து விறுவிறுப்பு கூட்டி கவனம் பெற்றுள்ளார் இயக்குனர்.

அதே போல் கதைக்கு ஏற்றவாறு தன்னுடைய பங்கை சுந்தர் சி சிறப்பாக கொடுத்துள்ளார். கொலையை கண்டறிவதில் தொடங்கி அவருடைய மேனரிசம் அனைத்துமே சிறப்பு.

ஹீரோயினுக்கு பெரிய வேலை இல்லை என்றாலும் கேரக்டரை நிறைவாக செய்துள்ளார். அவருக்கு அடுத்தபடியாக துணை கதாபாத்திரங்களும் கொடுத்த வேலையை சரியாக செய்துள்ளனர்.

இது போன்ற திரில்லர் படங்களுக்கு இசை ஒளிப்பதிவு மிகவும் முக்கியம். அந்த வகையில் குறை சொல்ல முடியாத அளவுக்கு காட்சிகள் பின்னணி இசையோடு ஒன்றியுள்ளது.

ஆரம்பத்தில் விறுவிறுப்பாக சென்ற கதை போக போக சிறு தடுமாற்றத்தை சந்தித்திருக்கிறது. அதனால் பார்வையாளர்களின் பொறுமை சோதனையாக இருக்கிறது.

இருந்தாலும் கிளைமாக்ஸ் ட்விஸ்ட் எதிர்பார்க்காதது. அந்த வகையில் திரில்லர் பிரியர்களுக்கு ஏற்ற படம்தான் இந்த வல்லான்.

சினிமா பேட்டை ரேட்டிங்: 2.5/5

Trending News