1. Home
  2. கருத்து

ஆபரேஷன் சிந்தூர்: இந்தியாவின் அதிரடி தாக்குதல்.. அடுத்தகட்ட நகர்வு என்ன?

ஆபரேஷன் சிந்தூர்: இந்தியாவின் அதிரடி தாக்குதல்.. அடுத்தகட்ட நகர்வு என்ன?

Operation Sindoor: திருமணமான பெண்கள் நெற்றியில் இடப்படும் குங்குமத்தை தான் சிந்தூர் என அழைப்பார்கள். அந்த வார்த்தையே இந்தியாவின் சமீபத்திய ராணுவ நடவடிக்கையின் பெயராக "ஆபரேஷன் சிந்தூர்" என பயன்படுத்தப்பட்டுள்ளது .

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், சுற்றுலா சென்ற 26 பேர் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டு நாடு முழுவதும் அதிர்ச்சி அலை பரவியது. அதன் தொடர்ச்சியாக, இந்தியா, பாகிஸ்தான் உறவுகளில் கடுமையான பதற்றம் நிலவியது.

இந்நிலையில், கடந்த நள்ளிரவு 1.44 மணிக்கு, இந்தியா, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீர் பகுதிகளில் உள்ள 9 முக்கிய இடங்களை குறிவைத்து, துல்லியமான ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல் முழுவதும் இந்திய எல்லைக்குள் இருந்தே மேற்கொள்ளப்பட்டது.

இந்தியாவின் அதிரடி தாக்குதல்

தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட இடங்கள்: பவல்பூர், முரிட்கே, சியால்கோட், சக் அம்ரு, குல்பூர், பிம்பர், கோட்லி மற்றும் முசாபராபாத் ஆகியவை ஆகும். இவை அனைத்தும் பயங்கரவாத முகாம்கள் என்பதற்கான உளவுத்தகவல்கள் உறுதி செய்யப்பட்டு, தாக்குதலுக்கு முன் டிரோன் கண்காணிப்பு உள்ளிட்ட முன்னெச்சரிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த தாக்குதல்களில் இந்திய வான்படை, கடற்படை மற்றும் தரைப்படை ஒருங்கிணைந்த பங்கேற்பு அளித்தன. இதில் 'பிரிசிஷன் ஸ்ட்ரைக்' என அழைக்கப்படும் துல்லிய தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டன. ஒவ்வொரு இலக்கையும் மிகச்சரியாகத் தீர்மானித்து, அதனை அழிக்கும் வகையில் திட்டமிடப்பட்டது.

தாக்குதலுக்கு "ஆபரேஷன் சிந்தூர்" என பெயரிடப்பட்டதற்குப் பின்னணியில் ஒரு வலிமையான காரணமும் உள்ளது. பஹல்காம் தாக்குதலில் கணவரை இழந்த பெண்கள், அவர்களது குங்குமத்தையும், வாழ்க்கையின் துணையையும் ஒரே நேரத்தில் இழந்தனர். குறிப்பாக, தேனிலவுக்குச் சென்ற ஒரு கடற்படை அதிகாரி, தனது மனைவியுடன் சென்றபோது உயிரிழந்தார். இதனைக் குறிக்கவே, இந்த ராணுவ நடவடிக்கைக்கு ‘சிந்தூர்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

தாக்குதல் நடைமுறைப்படுத்தப்பட்ட நேரம் வரை கூட, ராணுவத்தினருக்கு முழு விவரங்கள் தெரிவிக்கப்படாமல் ரகசியமாக வைத்தது. இது, எந்தவித தகவல் கசியலும் ஏற்படாமல் தடுக்கும் நோக்கத்தில் செய்யப்பட்டது. தாக்குதலுக்கு முன் சில மணி நேரத்திற்கு முன்பே வீரர்களுக்கு அறிவிக்கப்பட்டது.

இந்த நடவடிக்கை மூலம், பாகிஸ்தான் ராணுவத்தை அல்லாது, பயங்கரவாதிகளின் முகாம்களை மட்டுமே இலக்காகக் கொண்டு இந்தியா தாக்குதல் நடத்தியது என அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் எல்லையில் போர் பதற்றம் அதிகரித்து இருக்கும் சூழலில், எல்லையில் பாகிஸ்தான் இன்று காலை துப்பாக்கி, பீரங்கி தாக்குதல் நடத்தியதில் 10 இந்தியர்கள் பலியானதாக சொல்லபப்டுகிறது.

Cinemapettai Team
Arun

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.