Rajinikanth: பகைவன் கூட பாராட்டும் அளவுக்கு ஒரு மனிதர் இருப்பார் என்றால் அது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான் போல. இருப்பினும் சத்யராஜ் மற்றும் ரஜினிகாந்த் இருவரும் பகைவர்கள் என்று சொல்லிவிட முடியாது.
ஒரு சில கருத்து வேறுபாடுகள் காரணமாக இருவருக்கும் சுமுகமான உறவு இல்லை என்று வேண்டுமானால் சொல்லலாம். மிஸ்டர் பாரத் படத்திற்கு பிறகு ரஜினி ஹீரோவாக நடித்த பல படங்களில் சத்யராஜை வில்லனாக நடிக்க வைக்க இயக்குனர்கள் முயற்சி செய்து தோற்றுப் போய் இருக்கிறார்கள்.
லோகேஷ் சொன்ன சீக்ரெட்
இந்த முயற்சியில் வெற்றி பெற்றது என்னவோ லோகேஷ் கனகராஜ் தான். ரஜினியை வைத்து அவர் இயக்கிக் கொண்டிருக்கும் கூலி படத்தில் சத்யராஜை நடிக்க வைத்திருக்கிறார். இது குறித்து லோகேஷ் பேட்டி ஒன்றில் பகிர்ந்திருக்கிறார்.
அதில் சத்யராஜ் முதல் நாள் ஷூட்டிங் வந்தபோது கடந்த பத்து நாட்களில் என்னென்ன காட்சிகள் நடந்தது என்பதை அவருக்கு போட்டு காட்டினோம். இதைத் தொடர்ந்து தான் உங்களுடைய கேரக்டர் அமையும் என்று நான் சொல்லிக் கொண்டிருந்தேன்.
அவர் அந்த வீடியோவை பார்த்துவிட்டு, ஒரு நடிகனால் ஹீரோவாக நடிக்க முடியும். ஆனால் ரஜினி மட்டும் தான் ஹீரோவாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறார் என பாராட்டினாராம். அவர் மீது இருந்த கருத்து வேறுபாடுகளை தாண்டி அவருடைய ஆளுமை சத்யராஜை ஒரு முறை ஆட்டிப்பார்த்திருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.
காவிரி ஆறு பிரச்சனையில் நடிகர்கள் சங்கம் உண்ணாவிரதம் இருந்தபோது சத்யராஜ் மேடை ஏறி பேசியிருந்தார். ரஜினிகாந்த் கர்நாடகத்தை பூர்வீகமாக கொண்டவர். தமிழ்நாட்டுக்கு ஆதரவாக அந்த மேடையில் அமர்ந்திருந்தார்.
அந்த சமயத்தில் சத்யராஜ் பேசிய சில விஷயங்கள் ரஜினியை தாக்கும் விதமாக இருந்ததாகவும் அதனால் தான் இருவருக்குள்ளும் பிரச்சனை என்றும் சொல்லப்படுகிறது. ஆனால் இது குறித்து இவர்கள் இருவருமே எந்த இடத்திலும் பேசியது கிடையாது.