R.Sundarrajan: அந்த காலத்துல வந்த படத்திற்கு ஈடாகுமா இப்ப 500, 600 கோடி வசூலிக்கிற படங்கள். இப்படி 70, 80ல் பிறந்தவர்கள் ஆதங்கத்தோடு சொல்லும் அளவுக்கு தான் தமிழ் சினிமாவின் நிலை இருக்கிறது.
எதார்த்தமான குடும்ப பாங்கான கதைகளுக்கு பஞ்சம் ஏற்பட்டுள்ளது. எங்கு திரும்பினாலும் வன்முறைதான் தலைவிரித்து ஆடுகிறது. ஆனால் 40,50 வருடங்களை பின்னோக்கி பார்த்தால் பல சிறந்த படங்கள் இருப்பதை அறியலாம்.
அதேபோல் இவர் இயக்குனரா என்று சொல்லும் அளவுக்கு பல வெற்றி படங்களை கொடுத்தவர்தான் ஆர் சுந்தர்ராஜன். தற்போது சின்னத்திரையில் சிறகடிக்க ஆசை சீரியலில் இவர் நடித்து வருகிறார்.
ஆர் சுந்தர்ராஜன் இயக்கிய படங்களா இது
அதேபோல் சூரியவம்சம் படத்தில் மிலிட்டரி கதாபாத்திரம் என இவர் பல படங்களில் நடித்திருக்கிறார். ஆனால் இவர் ஒரு சிறந்த இயக்குனர் என்பது பல பேருக்கு தெரிய வாய்ப்பில்லை.
80 காலகட்ட தமிழ் சினிமாவை ஆளுமை செய்த இயக்குனர்களில் இவரும் ஒருவர். இவர் இயக்கிய பல படங்கள் வெள்ளி விழா கண்டு இன்றும் பார்க்கத் தூண்டும் வகையில் இருக்கிறது. அதை பற்றி காண்போம்.
இவர் எந்த இயக்குனரிடமும் உதவி இயக்குனராக பணியாற்றியது இல்லை. ஆனால் பாக்யராஜிடம் நெருங்கிய நண்பராக இருந்த காரணத்தினால் சில விஷயங்களை அவர் நுணுக்கமாக கற்றுக்கொண்டு இயக்குனராக அடி எடுத்து வைத்தார்.
மோகன், பூர்ணிமா பாக்யராஜ் நடித்த பயணங்கள் முடிவதில்லை தான் இவருடைய முதல் படம். இளையராஜா இசையில் 175 நாட்களுக்கு மேல் ஓடி வெள்ளி விழா கண்ட இப்படம் சுந்தர்ராஜனுக்கு பெரும் அங்கீகாரமாக அமைந்தது.
அதைத்தொடர்ந்து அவர் இயக்கிய வைதேகி காத்திருந்தாள், மெல்ல திறந்தது கதவு, ராஜாதி ராஜா, திருமதி பழனிச்சாமி, அம்மன் கோவில் கிழக்காலே, என் ஆசை மச்சான் என பல படங்கள் வெற்றிவாகை சூடியது.
அதில் வைதேகி காத்திருந்தாள் கேப்டனுக்கு பெரும் திருப்புமுனையாக அமைந்தது. ஏனென்றால் அதற்கு முன்னதாக அவர் ஆக்ஷன் ஹீரோ என்ற பிம்பத்தில் இருந்தார். அப்படிப்பட்டவர் வெள்ளைச்சாமி என்ற கதாபாத்திரத்தின் மூலம் ஆடியன்சை கலங்க வைத்தார்.
இந்த பெருமையும் சுந்தர்ராஜனுக்கு உண்டு. மேலும் இவருடைய இயக்கத்தில் மோகன், விஜயகாந்த் ஆகியோர்தான் அதிக முறை நாயகர்களாக நடித்திருக்கிறார்கள். அதேபோல் இவர் படங்களில் இளையராஜாவின் இசையும் முக்கியத்துவம் வாய்ந்தது.
மேலும் இவருடைய படத்தில் பெண்களுக்கான முக்கியத்துவம் அதிகம் இருக்கும். பெண் கல்வி பெண் உரிமை என பல விஷயங்களை காட்டி இருப்பார். அதேபோல் ரசிகர்களின் மனதை தெரிந்து கொண்டு அதற்கு ஏற்றார் போல் படம் எடுக்கத் தெரிந்த இயக்குனர்களில் இவரும் முக்கியமானவர்.
இப்படி வெற்றி பெற்ற இயக்குனராக இருந்த இவர் ஒரு கட்டத்திற்கு பிறகு திரைப்படங்களில் முழுமூச்சாக நடிக்க தொடங்கினார். தற்போது சின்னத்திரை பக்கமும் வந்துவிட்டார்.