King Kong : நடிகர் கிங் காங்-க்கு இவ்வளவு செல்வாக்கு இருக்கிறதா என்பதை இப்போதுதான் பலருக்கு தெரிகிறது. கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பதற்கு எடுத்துக்காட்டாக உயரம் ஒரு தடையில்லை என்பதை நிரூபித்து காட்டியிருக்கிறார். பல மொழிகளில் காமெடி கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்.
இந்த சூழலில் கிங் காங் தனது மூத்த மகளான கீர்த்தனாவுக்கு சமீபத்தில் திருமண ஏற்பாடு செய்திருந்தார். முதலமைச்சர் ஸ்டாலின், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் என பெரிய பிரபலங்கள் வீட்டிற்கு நேரிலேயே சென்று பத்திரிக்கை வைத்திருந்தார்.
ஆகையால் இந்த திருமணத்தில் யார் யார் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நேற்றைய தினம் பெசன்ட் நகரில் உள்ள முருகன் கோயிலில் திருமணம் நடைபெற்ற நிலையில் நடிகர்கள் யாரும் வராதது இணையத்தில் பேசுபொருளாக மாறியது.
கிங்காங் வீட்டு திருமணத்தில் கலந்து கொண்ட பிரபலங்கள்
ஆனால் மாலை நடைபெற்ற ரிசப்ஷனில் பலர் கலந்து கொண்டனர். அந்த வகையில் முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் பங்கு பெற்றனர். பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் போன்றோர் கலந்து கொண்டனர்.
நடிகர்களை பொருத்தவரையில் தம்பி ராமையா, மீசை ராஜேந்திரன், ஈரோடு மகேஷ், ராதாரவி, ரோபோ சங்கர் போன்றோர் கலந்து கொண்டனர். ஆனால் ரஜினி, விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், கார்த்தி போன்ற நடிகர்கள் வராதது ஏமாற்றம்தான்.
வீடு தேடி சென்று கிங்காங் பத்திரிக்கை வைத்து அழைத்திருந்தார். ஆனால் அவர்கள் வராதது பெரிய ஏமாற்றமாகத்தான் கிங்காங்-க்கு இருந்திருக்கும். இதற்கு காரணம் ஒரு சாதாரண நடிகர் என்பதால் என்ற விமர்சனங்கள் வருகிறது.