இசை மனிதர்களின் வாழ்வில் ஒரு முக்கிய அங்கமாக மாறியுள்ளது. 2025ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்களில் ஸ்பாட்டிபைவில் அதிகம் கேட்கப்பட்ட தமிழ் பாடல்களின் டாப் 10 பட்டியலை வெளியிட்டது. இதில் அனிருத், ஏ.ஆர்.ரகுமான், சந்தோஷ் நாராயணன், சாய் அபயங்கர் உள்ளிட்டோர் இடம் பிடித்துள்ளனர்.
தக் லைஃப் படத்தில் இடம்பெற்ற ஜிங்குச்சா பாடல் இந்த வார பாடல் பட்டியலில் 10வது இடத்தை பிடித்துள்ளது. ஏ.ஆர். ரகுமானின் இசையில் கடந்த ஏப்ரல் மாதம் வெளியான இந்த பாடல், ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதுவரை 1.33 கோடி முறை ஸ்ட்ரீம் செய்யப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
அடுத்தபடியாக, குட் பேட் அக்லி படத்தின் இரண்டு பாடல்கள் 8 மற்றும் 9வது இடங்களை பிடித்துள்ளன. ஜிவி பிரகாஷ் இசையில் வந்துள்ள “காட் பிளெஸ் யு” 9வது இடத்தில் 1.42 கோடி ஸ்ட்ரீமிங் கவுண்ட் பெற்றுள்ளது. அதே படத்தில் இடம்பெற்ற “ஓஜி சம்பவம்” 1.56 கோடி ஸ்ட்ரீமிங் வசூலுடன் 8வது இடத்தில் உள்ளது.
பிரதீப் ரங்கநாதன் நடித்த டிராகன் திரைப்படத்தின் “ஏண்டி விட்டு போன” பாடல் 1.66 கோடி ஸ்ட்ரீமிங் மூலம் 7வது இடத்திலும், “ரைஸ் ஆஃப் டிராகன்” 1.90 கோடி ஸ்ட்ரீமுடன் 6வது இடத்திலும் உள்ளன. இதேபோல் “வழித்துணையே” பாடல் 3.24 கோடி ஸ்ட்ரீமிங் பெற்று 4வது இடத்தை பிடித்துள்ளது; இந்த பாடல்களுக்கெல்லாம் லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ளார்.
இந்த டாப் 10 பட்டியலில் அனிருத்தின் ஒரே பாடல் “பத்திக்கிச்சு” 5வது இடத்தை பிடித்துள்ளது, இது 2.65 கோடி முறை ஸ்ட்ரீம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல், சூர்யாவின் ரெட்ரோ பட பாடல்கள் 2 மற்றும் 3வது இடங்களை கைப்பற்றியுள்ளது. சந்தோஷ் நாராயணனின் “கன்னிமா” 3.24 கோடியும், “கண்ணாடி பூவே” 3.36 கோடியும் ஸ்ட்ரீமிங் சாதனை படைத்துள்ளது.
முதலிடத்தில் சாய் அபயங்கர் பாடல்
இந்த பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது சாய் அபயங்கரின் சுயாதீன பாடலான “சித்திர புத்திரி”, 6 மாதங்களில் 3.45 கோடி ஸ்ட்ரீமிங் சாதனை படைத்துள்ளது. கடந்த வருடமும் அவரது “கட்சி சேரா” பாடல் முதலிடம் பிடித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டும் முன்னணி இசையமைப்பாளர்களை முந்திய சாய், தற்போது அரை டஜன் தமிழ் படங்களில் இசையமைத்து வருகிறார்.