Saroja Devi: கன்னடத்து பைங்கிளி என ரசிகர்கள் அன்புடன் அழைத்த சரோஜாதேவி, தமிழ்த் திரையுலகின் ஒளிவிளக்காக திகழ்ந்தவர். அழகு, அபிநயம், நடன திறமை மூன்றும் சேர்ந்தவர் என பெருமையுடன் பேசப்பட்டார்.
1950-களில் தன் திரை பயணத்தைத் தொடங்கி, முப்பதாண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்த அவரது நடிப்பு பயணம், தமிழ்சினிமாவின் பொற்காலத்தை பிரதிபலிக்கிறது.
எம்ஜிஆர், சிவாஜி போன்ற முன்னணி நடிகர்களுடன் ஏராளமான வெற்றிப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் மட்டுமல்லாமல், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி போன்ற மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வந்தார்.
மொத்தமாக சுமார் 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார் சரோஜா தேவி. அவருடைய முக்கியமான வெற்றிப் படங்களில் கல்யாண பரிசு, ஆடி பெருக்கு,பனித்திரை, பாலும் பழமும் ஆகியவை அடங்கும்.
எம்ஜிஆர் உடன் மிக அதிகமாக நடித்துள்ளார் சரோஜா தேவி. அவர்களுடன் நடித்த படங்களில் நடோடி மன்னன், அன்பே வா, எங்க வீட்டு பிள்ளை, படகோட்டி, பெரிய இடத்து பெண் போன்றவை முக்கியமானது. மொத்தமாக 26 படங்களில் எம்ஜிஆர்-சரோஜாதேவி ஜோடி திகழ்ந்தது.
சிவாஜி கணேசனுடன் கலந்த நடிப்பிலும் பிரம்மாண்ட வெற்றியை பெற்றார். புதிய பறவை, ஆலயமணி, பாகபிரிவினை, ஆகியவை முக்கியமானவை. மொத்தமாக 22 திரைப்படங்களில் சிவாஜியுடன் நடித்துள்ளார்.
அவருடைய கடைசி திரைப்படம் 2009-இல் சூர்யா நடித்த ஆதவன் திரைப்படம். இதில் அவர் ஒரு முக்கிய பங்கு வகித்தார் மற்றும் தன்னுடைய அனுபவத்தால் படத்துக்கு பெருமை சேர்த்தார். இந்தப் படம் அவரது திரை வாழ்க்கையின் ஒரு நிறைவுப் புள்ளியாக அமைந்தது.
அந்த சிறப்பான பயணத்துக்காக, சரோஜாதேவிக்கு பத்மபூஷன், பத்மஸ்ரீ, மற்றும் கலைமாமணி உள்ளிட்ட விருதுகள் கிடைத்துள்ளன. தேசிய அளவிலும், மாநில அளவிலும் இவரது பணிக்கு பெருமை சேர்த்த பல பாராட்டுகளும் கிடைத்துள்ளன.
திரையுலகில் ஒரு பிரமாண்ட நட்சத்திரமாக மட்டுமல்ல, பாராட்டு பெற்ற கலைஞராகவும் சரோஜாதேவி இன்றும் மக்கள் மனதில் நிலைத்திருக்கிறார்.