தற்போதைய தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினிகாந்த், ஆரம்பத்தில் பல சவால்கள், அவமானங்களை எதிர்கொண்டு தான் இன்று உயர்ந்த இடத்தை அடைந்துள்ளார். அவரது திரைபயணத்தின் தொடக்ககாலத்தில் ஏற்பட்ட சிக்கல்களை அவர் ஒரு நிகழ்ச்சியில் நேரடியாக பகிர்ந்துள்ளார். குறிப்பாக, மூன்று முடிச்சு படத்தின் சூழ்நிலைகள் மிகவும் கடினமானவை என அவர் தெரிவித்துள்ளார்.
1975-ம் ஆண்டு கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான அபூர்வ ராகங்கள் படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த் அறிமுகமானார். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து, பல திரைப்படங்களில் அவர் துணை மற்றும் வில்லன் வேடங்களில் நடித்தார். அதன்பின் 1976-ம் ஆண்டு வெளியான மூன்று முடிச்சு திரைப்படம் அவரது வாழ்க்கையில் மிக முக்கியமான திருப்பமாக அமைந்தது.
அந்த படத்தில் கமல்ஹாசன் மற்றும் ஸ்ரீதேவி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்கள். ரஜினிகாந்த் வில்லனாக நடித்து, கதையின் திருப்பங்களை உருவாக்கும் முக்கிய கேரக்டராக இருந்தார். ஆனால் இப்படத்தில் அவரை எடுப்பதை தயாரிப்பாளர்களும் விநியோகஸ்தர்களும் எதிர்த்தனர்.
ரஜினிக்காக தயாரிப்பாளர்களிடம் சவால் விடுத்த இயக்குனர்
“யார் இந்த ரஜினிகாந்த்? அவன் முடி, பேச்சு, தோற்றம்… தமிழ் ரசிகர்களிடம் பிடிக்குமா?” என அவர்கள் கேள்வி எழுப்பினர். ஆனால் கே.பாலச்சந்தர் தைரியமாக, “இவனை வைத்து படம் எடுக்காதீர்கள் என்றால், நானே சினிமாவை விட்டு வெளியேறிவிடுகிறேன்,” என சவால் விட்டார். அவருடைய இந்த உறுதி தான் ரஜினிகாந்தின் வாழ்க்கையை மாற்றி அமைத்தது.
அந்த படப்பிடிப்பின் போது, ரஜினிகாந்த் தவறு செய்தால், கே.பாலச்சந்தர் திட்டுவதோடு இல்லாமல் அடித்தும் இருப்பார். மேலும் மற்றவர்கள் இழிவாக பேசுவதையும் ரஜினி தாங்கிக்கொண்டார். அவருக்காக இந்த படத்தில் சிறப்பாக நடிக்க வேண்டும் என ரஜினிகாந்த் தீர்மானித்தார்.
“இந்த படம் 100 நாட்கள் ஓடினாலே போதும். அதற்குப் பிறகு பஸ் கண்டக்டராக போனாலும் பரவாயில்லை,” என்று முடிவெடுத்து நடித்தார் ரஜினி. இந்த நிகழ்வுகள் அவரது வளர்ச்சிக்கு அடித்தளம் அமைத்தன. இன்று உலகம் முழுவதும் இருக்கும் ரசிகர்களை கொண்ட சூப்பர்ஸ்டாராக உயர்ந்துள்ள ரஜினியின் பயணம், ஆரம்பத்தில் இருந்த தியாகம், முயற்சி மற்றும் தன்னம்பிக்கையின் நிஜமான சாட்சி.