
சின்னத்திரையில் முன்னணி நடிகையாக வலம் வரும் அர்ச்சனா ரவிச்சந்திரன், சமீபத்தில் திருவண்ணாமலைக்குச் சென்றிருந்தார். சுமார் 2,668 அடி உயரம் கொண்ட அண்ணாமலையார் மலையின் உச்சிக்கு அவர் சென்றுள்ளார். இந்தப் பகுதி முழுவதும் வனத்துறையின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளது. வனவிலங்குகளின் பாதுகாப்பு மற்றும் பக்தர்களின் பாதுகாப்பைக் கருதி, முறையான அனுமதி இன்றி மலை ஏறுவதற்குப் பொதுமக்களுக்குக் கடுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது.
nn
ஆனால், அர்ச்சனா இந்த விதிகளைப் பொருட்படுத்தாமல் மலை உச்சி வரை சென்று திரும்பியுள்ளார். இது ஒரு சாதாரணப் பயணமாக மட்டும் இருந்திருந்தால் ஒருவேளை வெளியே தெரிந்திருக்காது. ஆனால், தான் ஒரு பிரபலம் என்பதையும் மறந்து, அந்தப் பயணத்தை வீடியோவாகப் பதிவு செய்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டதுதான் அவருக்குச் சிக்கலை ஏற்படுத்தியது.
nn
அர்ச்சனா வெளியிட்ட வீடியோவில், மலை ஏறுவது எவ்வளவு சவாலாக இருந்தது என்பதையும், இறங்கும் போது இருட்டிவிட்டதால் தான் எவ்வளவு பயந்தேன் என்பதையும் விவரித்திருந்தார். மேலும், “நீங்கள் யாராவது டிரெக்கிங் (Trekking) செல்வதாக இருந்தால், அதிகாலையிலேயே கிளம்பி விடுங்கள், மாலைக்குள் கீழே இறங்கிவிடுவது பாதுகாப்பானது” என ஒரு அறிவுரையையும் தனது ரசிகர்களுக்கு வழங்கியிருந்தார்.
nn
இந்த வீடியோ காட்டுத்தீயாகப் பரவியது. “சட்டம் அனைவருக்கும் சமம்” என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பத் தொடங்கினர். வனத்துறையின் அனுமதி பெறாமல் எப்படி ஒரு செலிபிரிட்டி அங்கு செல்ல முடியும்? என்ற விவாதம் கிளம்பியது.
nn
இந்த விவகாரம் திருவண்ணாமலை வனத்துறையினரின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது. வீடியோவை ஆதாரமாகக் கொண்டு உடனடியாக விசாரணை மேற்கொண்டனர். அனுமதியின்றி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் நுழைந்தது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, நடிகை அர்ச்சனாவிற்கு 10,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
nn
பொதுவாகக் கார்த்திகை தீபத் திருவிழா போன்ற விசேஷ காலங்களில் மட்டுமே குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நபர்களுக்கு மலை ஏற அனுமதி வழங்கப்படுவது வழக்கம். மற்ற நேரங்களில் அத்துமீறி நுழைபவர்கள் மீது வன பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
nn
மலைப்பகுதிகளில் கரடி, சிறுத்தை போன்ற வனவிலங்குகளின் நடமாட்டம் இருக்கும். இருட்டிய பிறகு தனியாகச் செல்வது உயிருக்கு ஆபத்தானது. பிரபலங்கள் செய்யும் சிறு தவறுகளும் மற்றவர்களுக்குத் தவறான முன்னுதாரணமாகிவிடும் என்பதால், வனத்துறையினர் எடுத்துள்ள இந்த நடவடிக்கை சமூக வலைதளங்களில் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.