அரசியல் களத்தில் ஜனநாயகன்: விஜய்யின் கடைசி படம் அவருக்குப் பலமா அல்லது பலவீனமா?

தமிழகமே இப்போது 2026 சட்டமன்றத் தேர்தலுக்காகக் காத்திருக்கிறது. குறிப்பாக, சினிமா வாழ்க்கைக்கு முழுக்கு போட்டுவிட்டு ‘தமிழக வெற்றிக் கழகம்’ வழியாக களமிறங்கும் விஜய்க்கு இந்தப் படம் ஒரு மாற்றமாக அமையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சென்சார் போர்டு கெடுபிடிகள், நீதிமன்ற வழக்குகள் மற்றும் சமீபத்திய ஆன்லைன் கசிவுகள் என ஜனநாயகன் படத்திற்குத் தொடர்ச்சியாக வரும் சிக்கல்கள், அதன் ரிலீஸை ஒரு மிகப்பெரிய கேள்விக்குறியாக்கியுள்ளன.

ஒருவேளை ஏப்ரல் 23-ஆம் தேதி நடக்கும் தேர்தலுக்கு முன்னால் ‘ஜனநாயகன்’ தியேட்டருக்கு வந்தால், அது விஜய்யின் தேர்தல் பிரச்சாரத்திற்கு ஒரு மிகப்பெரிய வலுசேர்க்கும். படத்தில் அவர் பேசும் வசனங்கள், முன்வைக்கும் அரசியல் கருத்துக்கள் நேரடியாக வாக்காளர்களின் மனதைச் சென்றடையும்.

ஒரு இரண்டு மணி நேரத் திரைப்படம், நூறு பொதுக்கூட்டங்கள் செய்யாத வேலையைச் செய்துவிடும் என்பதுதான் நிதர்சனம். அதனால்தான், தேர்தல் ஆணையம் மற்றும் சென்சார் போர்டு இந்தப் படத்தின் உள்ளடக்கத்தில் இவ்வளவு தீவிரமாகத் தலைகையிடுகின்றன.

சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், ஒருவேளை இந்தப் படம் தேர்தலுக்கு முன் வெளியாகாமல் தடுக்கப்பட்டால், அதுவே விஜய்க்கு ஒரு மிகப்பெரிய அரசியல் ஆயுதமாக மாற வாய்ப்புண்டு. “மக்களுக்காக நான் எடுத்த படத்தைத் தடுத்துவிட்டார்கள்” என்கிற அந்த அனுதாப அலைகளை உருவாக்கலாம். இது ஆளுங்கட்சிக்கும் மற்ற எதிர்க்கட்சிகளுக்கும் ஒரு தலைவலியாகவே அமையும். சினிமா ரசிகர்களை அரசியல் தொண்டர்களாக மாற்றும் அந்த ‘மேஜிக்’ இந்தத் தடையால் இன்னும் வேகமாக நடக்கக்கூடும்.

சமீபத்தில் இந்தப் படத்தின் 5 நிமிட காட்சிகள் மற்றும் முழு படமுமே இணையத்தில் கசிந்ததாக வந்த செய்திகள் தயாரிப்புத் தரப்பை அதிர்ச்சியடைய வைத்தன. இது வணிக ரீதியாக ஒரு நஷ்டம் என்றாலும், படத்தின் அரசியல் வீரியத்தை மக்களுக்கு முன்கூட்டியே கொண்டு செல்ல இது மறைமுகமாக உதவியுள்ளது.

இந்தப் படத்தில் வரும் AI துறை அமைச்சகம், 2500 ரூபாய் மகளிர் உதவித்தொகை போன்ற தேர்தல் வாக்குறுதிகள், படத்தின் காட்சிகளாகவே மக்களிடம் பரவி வருகின்றன. இது ஒருவகையில் படத்திற்குத் தடையின்றி நடக்கும் ‘டிஜிட்டல் பிரச்சாரம்’ போலவே பார்க்கப்படுகிறது.

தமிழக அரசியலில் சினிமா எப்போதும் ஒரு முக்கியப் பங்கு வகித்துள்ளது. எம்.ஜி.ஆர் முதல் ஜெயலலிதா வரை திரையில் சொன்ன கருத்துக்கள்தான் அவர்களை ஆட்சியில் அமரவைத்தன. அந்த வரிசையில், ‘ஜனநாயகன்’ படம் வெறும் ஒரு கமர்ஷியல் ஆக்சன் படமாக மட்டும் இல்லாமல், விஜய்யின் அரசியல் கொள்கை படமாக அமைந்தால், அது 14-15% வாக்கு வங்கியை வைத்திருக்கும் TVK கட்சிக்கு ஒரு பெரிய திருப்புமுனையாக அமையும்.

ஜனநாயகன் தியேட்டருக்கு வந்தாலும் சரி, தடையால் முடக்கப்பட்டாலும் சரி. அது 2026 தேர்தல் முடிவுகளில் ஏதோ ஒரு வகையில் தனது தாக்கத்தை ஏற்படுத்தப்போவது உறுதி.

vijay-founder-of-cinemapettai

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.

View all posts →