டோலிவுட்டில்ல் முன்னணி நட்சத்திரமாக வலம் வரும் நடிகர் மகேஷ் பாபு, தனது சினிமாப்பயணத்தில் 47 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இதனை முன்னிட்டு அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பல்வேறு பதிவுகளைப் பகிர்ந்து கொண்டாடி வருகின்றனர். குழந்தை நட்சத்திரமாகத் தொடங்கிய அவரது பயணம் இன்று சூப்பர் ஸ்டார் அந்தஸ்து வரை வளர்ந்திருப்பது ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கடந்த 1979ஆம் ஆண்டு வெளியான ‘நீதா’ படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக மகேஷ் பாபு திரையுலகில் அறிமுகமானார். சிறு வயதிலேயே கேமரா முன்பு நடிக்கத் தொடங்கிய அவர், தொடர்ந்து சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து தனது திறமையை வெளிப்படுத்தினார். அதன் பிறகு 1999ஆம் ஆண்டு வெளியான ‘ராஜகுமாருடு’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.
ஆரம்பத்தில் இளம் நடிகராக தனது பயணத்தைத் தொடங்கிய மகேஷ் பாபு, ஒவ்வொரு படத்தின் மூலமும் ரசிகர்களின் ஆதரவைப் பெற்று முன்னணி நடிகராக உயர்ந்தார்.
குறிப்பாக ‘ஒக்கடு’, ‘போக்கிரி’ போன்ற படங்கள் அவரது பயணத்தில் மிக முக்கியமான இடத்தைப் பிடித்தன.இந்தப் படங்களின் வெற்றி அவருக்குத் தெலுங்கு சினிமாவில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக் கொடுத்தது.
நடிப்பு, ஸ்கீரின் ப்ரசன்ஸ்,யுனிக் ஸ்டோரி செலக்ஷன் எனத் தொடர்ந்து தனது பயணத்தில் பல்வேறு மாற்றங்களைச் சந்தித்து வந்தாலும், ரசிகர்களுடனான அவரது உறவு இன்றளவும் வலுவாக இருந்து வருகிறது.தற்போது 47 ஆண்டுகால சினிமா பயணத்தைக் கொண்டாடும் வகையில், அவரது சிறுவயது போட்டோக்கள் மற்றும் தற்போதைய கெட்டப்பை இணைத்து ரசிகர்கள் உருவாக்கியுள்ள போஸ்டர்கள் இணையத்தில் கவனம் பெற்று வருகின்றன.




