Tamizhaga Vetri Kazhagam: அவனவன் எடுக்கிற முடிவு எல்லாம் நமக்கு சாதகமா தான் இருக்குது என வடிவேலு ஒரு காமெடி காட்சியில் சொல்லுவார். அப்படித்தான் நடிகர் விஜய் சினிமாவில் இருந்து விலகப் போகிறேன் என்று அறிவித்ததை ஒரு கூட்டம் திருவிழா போல் கொண்டாடி வருகிறது. விஜய் அரசியலில் நுழைய இருப்பதை அவருடைய ரசிகர்கள் கொண்டாடுவதை விட அதிகமாக கொண்டாடுவது இந்த கூட்டம் தான்.
விஜய் அரசியலுக்கு வரப்போகிறார் என்ற செய்தி வதந்தியாக கிளப்பப்பட்டு இப்போது அதுவே உண்மையாகி விட்டது. தமிழக வெற்றி கழகம் என்னும் கட்சியை தொடங்கியிருப்பதாகவும், இந்திய தேர்தல் ஆணையத்தில் தங்களுடைய கட்சியின் பெயரை பதிவு செய்து விட்டதாகவும் தளபதி விஜய் கடந்த வெள்ளிக்கிழமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டார். மதவாதம் மற்றும் ஊழலை எதிர்த்து தன்னுடைய கட்சி போராடும் எனவும் சொல்லியிருக்கிறார்.
மக்கள் சேவை செய்வதற்காக நான் அரசியலுக்கு வந்திருக்கிறேன், அரசியல் ஒரு தொழில் அல்ல அது ஒரு புனிதமான வேலை என்று சொன்ன விஜய், தன்னுடைய சார்பில் ஒத்துக் கொண்ட படங்களை முடித்துவிட்டு சினிமாவில் இருந்து விலக இருப்பதாகவும் அறிவித்துவிட்டார். வெங்கட் பிரபு இயக்கத்தில் நடித்துக் கொண்டிருப்போம் படத்தை முடித்துவிட்டு, தன்னுடைய 69ஆவது படத்துடன் சினிமாவுக்கு எண்டு கார்டு போடுகிறார் தளபதி.
விஜய் சினிமாவில் இருந்து விலகுவது அவருடைய ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக இருக்கிறது. இனி அவரை திரையில் பார்க்க முடியாது என்பது அவருடைய ரசிகர்களுக்கு பெரிய மன கவலை தான். ஆனால் நடிகர் விஜய் எடுத்து இருக்கும் இந்த முடிவை அஜித்தின் விசுவாசிகள் இணையதளத்தில் ஒரு திருவிழா போல் கொண்டாடி வருகிறார்கள்.
விஜய்யின் அரசியல் முடிவை கொண்டாடும் கூட்டம்
இனி சினிமாவில் அஜித்திற்கு எதிராக யாருமே இல்லை, தனிக்காட்டு ராஜாவாக அவர் இறங்கி அடிக்க போகிறார் என்பதுதான் அஜித்தின் விசுவாசிகளுக்கு உண்மையான சந்தோஷம். அதற்கு ஏற்றது போல் அஜித்குமார் விடாமுயற்சி படத்தை முடித்துவிட்டு அடுத்தடுத்து ஆதிக் ரவிச்சந்திரன், வெற்றிமாறன், பிரசாந்த் நீல், சிறுத்தை சிவா, லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து பணிபுரிய இருக்கிறார்.
இதுவரை இருக்கும் கணிப்பு படி பார்த்தால் வாரிசு மற்றும் துணிவு தான் இறுதியாக மோதிக்கொண்ட அஜித், விஜய் படங்கள். விஜய் மற்ற நடிகர்களை போலவே அரசியல் என்னும் கடலில் காணாமல் போய்விடுவார் என்பது பலரது கருத்தாக இருக்கிறது. இருந்தாலும் இத்தனை வருட காலமாக அஜித், விஜய் என்று இருந்த போட்டி களத்தில் இனி விஜய் இருக்க மாட்டார் என்பது 90ஸ் கிட்ஸ் களுக்கு பெரிய ஏமாற்றமாகத்தான் இருக்கிறது.