60s Tamil Movie Villians: தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களாக தான் வில்லன் கேரக்டரில் நடிக்கும் நடிகர்களுக்கு மவுசு அதிகமாக இருக்கிறது. முன்பெல்லாம் ஒரு படத்தில் வில்லனாக நடிக்கிற நடிகர்களை பொதுமக்கள் திட்டி தீர்ப்பதோடு அவர்களை நேரில் எங்கையாவது பார்க்க நேர்ந்தால் கூட சினிமா என்பதையே மறந்து நேரிடையாகவே திட்டி சாபமிட்ட கதைகள் எல்லாம் உண்டு. மேலும் இந்த வில்லன் நடிகர்களுக்கு மார்க்கெட் என்பதும் ஐந்து முதல் பத்து வருடங்களாகத்தான் இருக்கும்.
ஒரு வில்லனை தொடர்ந்து எல்லா படங்களிலும் பார்ப்பதற்கு மக்களுக்கு சலிப்பு ஏற்பட்டு விடும் என்பதற்காகத்தான் புதிது புதிதாக வில்லன்களை இறக்குவார்கள் இயக்குனர்கள். அதேபோன்று ஹீரோக்களுக்கு ஏற்ற மாதிரி தான் வில்லனையும் தேர்ந்தெடுப்பார்கள். ஹீரோக்களை விடவில்லன்கள் அதிக கவனம் பெற கூடாது என்பதால் தான் இப்படி நடக்கும்.
இப்படி போட்டிகள் பல நிறைந்த அப்போதைய சினிமா துறையில் தனக்கென ஒரு வித்தியாசமான நடிப்பை கண்டுபிடித்து நான்கு தலைமுறை ஹீரோக்களுக்கும் வில்லனாக நடித்து இருக்கிறார் ஒரு நடிகர். உடல் அமைப்பு மற்றும் சண்டை பயிற்சி பெற்றிருந்தால் மட்டுமே வில்லனாக மிரட்ட முடியும் என்று இருந்த 60களின் சினிமாவில் குரலை வைத்தே மிரட்டிய பி எஸ் வீரப்பா தான் அந்த நடிகர்.
மேடை நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்த இவரின் நடிப்பை பார்த்து கே பி சுந்தராம்பாள் சென்னைக்கு அழைத்து சிபாரிசு செய்து சினிமாவில் நடிக்க வைத்தார். பி எஸ் வீரப்பா அவருடைய உரத்த சிரிப்புக்காக தான் ரசிகர்களிடையே அதிக வரவேற்பை பெற்றார். அதிலும் வஞ்சிக்கோட்டை வாலிபன் படத்தில் இவர் பேசிய சபாஷ் சரியான போட்டி மற்றும் மகாதேவி படத்தில் இவர் பேசிய மணந்தால் மகாதேவி இல்லையேல் மரண தேவி போன்ற வசனங்கள் இன்று வரை பிரபலம்.
இவருடைய நடிப்புத் திறமையை பார்த்து மக்கள் திலகம் எம்ஜிஆர் மற்றும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தொடர்ந்து தங்களுடைய படங்களில் வாய்ப்புகளை கொடுத்தார்கள். அதுமட்டுமில்லாமல் கமலஹாசன், ரஜினிகாந்த், விஜயகாந்த் போன்ற நடிகர்களுடனும் வில்லனாக நடித்து நான்கு தலைமுறையாக சினிமாவில் நடித்து வந்த நடிகர் என்ற சாதனையையும் இவர் செய்து இருக்கிறார்.
அது மட்டுமில்லாமல் சி என் அண்ணாதுரை, என் டி ராமராவ், எம்ஜிஆர், கலைஞர் கருணாநிதி, வி என் ஜானகி, செல்வி ஜெயலலிதா என ஆறு முதலமைச்சர்கள் உடன் பிஎஸ் வீரப்பாவுக்கு நெருங்கிய நட்பும் இருந்திருக்கிறது. 1998 இல் தன்னுடைய 87 ஆவது வயதில் இவர் மறைந்து விட்டார். இவருடைய மகன் பி எஸ் ஹரிஹரன் தற்போது தயாரிப்பாளராக இருக்கிறார்.