ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

இன்றும் மறக்க முடியாத பிரபுவின் 6 படங்கள்.. 250 நாட்களுக்கு மேல் ஓடிய சின்னதம்பி!

வணக்கம் சினிமா பேட்டை வாசகர்களே! நமது வலைத்தளத்தில் தொடர்ந்து பல சுவாரசியமான தமிழ் சினிமா கட்டுரைகளையும், செய்திகளையும் கண்டு வருகிறோம். அந்த வகையில் இன்று நாம் காணவிருக்கும் தலைப்பு நடிகர் இளைய திலகம் பிரபு நடித்து வெற்றி பெற்ற ஏழு திரைப்படங்களைப் பற்றி. பிரபு அவர்கள் காதல் திரைப்படங்கள் மற்றும் ஆக்ஷன் திரைப்படங்கள் மூலமாக ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். அவருடைய குழி விழும் சிரிப்புக்கும் நடனத்திற்கும் 90களில் ரசிகைகள் கூட்டம் அதிகமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

கும்பக்கரை தங்கய்யா: 1991-ஆம் வருடம் இசையமைப்பாளர் தயாரிப்பாளர் என்று பன்முகம் கொண்ட கங்கை அமரன் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் கும்பக்கரை தங்கையா. இந்த படத்தில் இளைய திலகம் பிரபு அவர்களுக்கு ஜோடியாக கனகா நடித்திருந்தார். முக்கிய கதாபாத்திரத்தில் முன்னால் வில்லன் நடிகர் மற்றும் குணச்சித்திர நடிகர் எம் என் நம்பியார் நடித்திருந்தார். படத்திற்கு இசை இசைஞானி இளையராஜா. நல்லதொரு வெற்றியை பதிவு செய்த இந்த திரைப்படம் 100 நாட்களுக்கும் மேல் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடியது.

அக்னி நட்சத்திரம்: புதுமை இயக்குனர் மணிரத்னம் அவர்கள் இயக்கத்தில் பிரபு கார்த்திக் நிரோஷா ஜெய்சங்கர் மற்றும் பலர் இணைந்து நடித்த திரைப்படம் அக்னி நட்சத்திரம். பாடல்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகிய இந்த படத்திற்கு இசை இளையராஜா. ஒளிப்பதிவை பிசி ஸ்ரீராம் கவனித்துக்கொண்டார். இந்த படத்தின் மூலம் நடிகை ராதிகாவின் தங்கை நிரோஷா அறிமுகமானார். பின்னாளில் இந்த திரைப்படத்தை அடிப்படையாகக் கொண்டு நேருக்கு நேர் என்னும் திரைப்படம் எடுக்கப்பட்டது என்பது குறிப்பிட வேண்டியது. சென்னையில் மட்டும் இந்த திரைப்படம் 200 நாட்களுக்கு மேல் ஓடியது.

அரங்கேற்ற வேளை: 1990ஆம் வருடம் மலையாள இயக்குனர் பாசில் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் அரங்கேற்ற வேளை. இந்த படத்தில் பிரபுவுக்கு ஜோடியாக ரேவதி நடித்திருந்தார். வி.கே ராமசாமி தன் பங்கிற்கு இந்த படத்தில் நகைச்சுவையை அள்ளி கொடுத்திருந்தார். இந்தப் படத்திற்கும் இசை இளையராஜா. மலையாள திரைப்படமான ராம்ஜி ராவ் ஸ்பீக்கிங் என்ற திரைப்படத்தின் தமிழ் ரீமேக்தான் இந்த படம். தமிழகத்திலும் வெற்றி வாகை சூடிய இந்த திரைப்படம் 150 நாட்கள் வரை ஓடியது.

மை டியர் மார்த்தாண்டன்: 1990 ஆம் வருடம் இயக்குனர் மற்றும் நடிகர் பிரதாப் போத்தன் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் மை டியர் மார்த்தாண்டன். இந்த திரைப்படத்தில் பிரபு, குஷ்பு, கவுண்டமணி, சின்னி ஜெயந்த் மற்றும் பலர் நடித்திருந்தனர். கமிங் டு அமெரிக்கா என்ற ஹாலிவுட் படத்தின் அப்பட்டமான தழுவல் இந்த திரைப்படம். பாடல்கள் எல்லாம் மிகப் பெரும் ஹிட்டடித்த காரணத்தால் இந்தப் படம் 150 நாட்களுக்கு மேல் ஓடியது.

திருப்பதி ஏழுமலை வெங்கடேசா: இயக்குனர் இராம நாராயணன் இயக்கத்தில் பிரபு, ரோஜா, வடிவேலு, கோவை சரளா, எஸ் வி சேகர், வெண்ணிற ஆடை மூர்த்தி மற்றும் பலர் இணைந்து நடித்த திரைப்படம் திருப்பதி ஏழுமலை வெங்கடேசா. முழுக்க முழுக்க காமெடி திரைப்படமான இதில் வடிவேலு, கோவை சரளா அடிக்கும் லூட்டி மிகப்பிரபலம். வணிக ரீதியாக மாபெரும் வெற்றி பெற்ற இந்த திரைப்படம் 100 நாட்களுக்கு மேல் ஓடியது.

சின்ன மாப்பிள்ளை: 1993-ஆம் வருடம் பிரபு,சுகன்யா, ராதாரவி மற்றும் பலர் இணைந்து நடித்த திரைப்படம் சின்ன மாப்பிள்ளை. நடிகர் இயக்குனர் சந்தானபாரதி இந்தப் படத்தை இயக்கியிருந்தார். படத்திற்கு இசை இசைஞானி இளையராஜா. வசனத்துக்கு வசனம் நகைச்சுவை கலந்த இந்த திரைப்படத்திற்கு கிரேசி மோகன் வசனகர்த்தா ஆவார். 125 நாட்களுக்கு மேல் சென்னையில் ஓடிய இந்த திரைப்படம் நல்லதொரு வெற்றியை பதிவு செய்தது.

சின்னத்தம்பி: இளைய திலகம் பிரபுவின் மிகப்பெரும் ஹிட் என்றால் அது சின்ன தம்பி. இயக்குனர் பி வாசு இயக்கிய இந்த திரைப்படத்தில் பிரபுவுக்கு ஜோடியாக குஷ்பு நடித்திருந்தார். முக்கிய கதாபாத்திரத்தில் குஷ்புவின் அண்ணனாக ராதாரவி, பிரபுவின் தாயாக மனோரமா ஆகியோர் சிறப்பாக நடித்திருந்தனர். 6 மணிக்கு மேல் கண் தெரியாதவராக கவுண்டமணி செய்த நகைச்சுவை மிகப்பிரபலம். 250 நாட்களுக்கும் மேல் வெற்றிகரமாக ஓடிய இந்த திரைப்படம் வசூல் மழை பொழிந்தது என்றால் அது மிகையல்ல.

Trending News