ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 29, 2024

46 வருடமாக யாராலும் முறியடிக்கப்படாத சாதனை.. புகழின் உச்சத்தை தொட்ட சுருளிராஜன்!

பொதுவாக தமிழ் சினிமாவில் வெகு சில நடிகர்களே காமெடியில் தங்களுக்கென ஒரு நிலையான இடத்தை பிடித்து ரசிகர்களை கவர்ந்துள்ளார்கள். அந்த வரிசையில் காமெடி ஜாம்பவானாக சினிமாவில் தன்னை நிலை நாட்டியவர் நடிகர் சுருளிராஜன்.

இவர் நாகேஷ், சந்திரபாபு, பாலையா போன்ற பல காமெடி நடிகர்கள் சினிமாவில் தங்கள் ஆதிக்கத்தை செலுத்தி வந்த கால கட்டத்தில் தன்னுடைய தனிப்பட்ட திறமையின் மூலம் ரசிகர்களால் கொண்டாப்பட்டவர். இவர் நகைச்சுவை கதாபாத்திரம் மட்டுமின்றி எந்த ஒரு கதாபாத்திரத்திலும் அற்புதமாக பொருந்த கூடியவர்.

மேலும் அவருடைய குரல் வளமும், வசன உச்சரிப்பும் மிக வித்தியாசமாக இருக்கும். இதன் காரணமாகவே இவருக்கு ஏராளமான பட வாய்ப்புகள் குவிந்தது. இவர் அளவுக்கு அதிக படங்களில் எந்த ஒரு நடிகரும் இதுவரை நடித்ததில்லை என்று சொல்லலாம்.

ஆரம்ப காலகட்டத்தில் மிகச் சில திரைப் படங்களில் மட்டுமே நடித்து வந்த அவர் 1975வது ஆண்டுக்குப் பிறகு அதிகமான படங்களில் நடிக்க ஆரம்பித்தார். அதிலும் 1980 ம் ஆண்டில் மட்டும் இவர் சுமார் 50 திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இந்த சாதனையை 46 வருடமாக யாராலும் முறியடிக்கவில்லை.

இது அன்றைய தமிழ் சினிமாவில் சரித்திர சாதனையாக பார்க்கப்பட்டது. மேலும் இவர் நடிகர் ரஜினிகாந்த் உடன் இணைந்து பல திரைப்படங்களில் நடித்துள்ளார். அதிலும் முரட்டு காளை திரைப்படத்தில் இவர் ஏற்று நடித்த வில்லன் கலந்த கதாபாத்திரம் அனைவராலும் வெகுவாக ரசிக்கப்பட்டது.

இப்படி புகழின் உச்சியில் இருந்த இவருடைய வாழ்க்கை தவறான நட்பு, குடிப்பழக்கம் ஆகியவற்றின் காரணமாக திசை திரும்பியது. இதனாலேயே அவருக்கு பட வாய்ப்புகளும் பறிபோனது. தமிழ் சினிமாவில் நீண்ட காலம் ஒரு அற்புதமான நடிகராக வலம் வந்திருக்க வேண்டிய அவர் கூடா நட்பின் காரணமாக தன்னுடைய 42வது வயதில் அகால மரணம் அடைந்தார். மிகப்பெரிய சாதனையை நிகழ்த்திய 1980 ஆம் வருடமே அவருடைய இறப்பும் நிகழ்ந்தது தான் மிகப்பெரிய சோகம்.

Trending News