வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

அழகிய குழந்தைக்கு தாயான நடிகை காஜல் அகர்வால்.. சந்தோஷத்துடன் செய்தி வெளியிட்ட தங்கை

தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் காஜல் அகர்வால். இவர் தமிழில் விஜய், அஜித், சூர்யா போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து இருக்கிறார். சினிமாவில் பிஸியாக நடித்துக்கொண்டிருக்கும் போதே இவர் கடந்த 2020ஆம் ஆண்டு கௌதம் கிச்சிலி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இவருடைய திருமணம் காஜலின் ரசிகர்களுக்கு மிகுந்த அதிர்ச்சியாக இருந்தாலும் அனைவரும் இந்த தம்பதிகளுக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். திருமணத்திற்கு பிறகும் காஜல் தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தி வந்தார்.

இந்நிலையில் காஜல் சில மாதங்களுக்கு முன்பு தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார். இதனால் மகிழ்ச்சி அடைந்த ரசிகர்களும், பிரபலங்களும் அவருக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். மேலும் காஜல் நடித்துக்கொண்டிருந்த படப்பிடிப்பில் தொடரமுடியாத சூழ்நிலையில் அவர் அந்த படங்களில் இருந்து விலகினார்.

அதன் பிறகு அவர் தன் கணவருடன் வெளிநாட்டுக்கு சென்று அங்கு ஓய்வில் இருந்தார். இடையிடையே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய கர்ப்ப கால நடவடிக்கைகள் அனைத்தையும் போட்டோ மற்றும் வீடியோக்களாக வெளியிட்டு வந்தார்.

சமீபத்தில் கூட அவருக்கு மிகவும் விமரிசையாக வளைகாப்பு விழா நடத்தப்பட்டது. அந்த புகைப்படங்கள் அனைத்தும் வெளியாகி ரசிகர்களை அதிக அளவில் கவர்ந்தது. மேலும் அவர் தன்னுடைய குழந்தையின் வரவை எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருப்பதாகவும் ரசிகர்களிடம் பகிர்ந்து கொண்டார்.

இந்நிலையில் அவருக்கு இன்று காலை அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த தகவலை காஜல் அகர்வாலின் தங்கை நிஷா அகர்வால் மிகவும் மகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார். அழகிய குழந்தையின் வரவால் தன் குடும்பம் தற்போது மகிழ்ச்சியாக இருப்பதாகவும், தாயும் சேயும் பரி பூரண நலம் என்றும் அவர் தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் காஜலுக்கு தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Trending News