இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர், கதையாசிரியர் என பல பரிமாணங்களைக் கொண்டவர் நடிகர் எஸ் ஜே சூர்யா. தற்போது முன்னணி ஹீரோக்களாக இருக்கும் விஜய், அஜித் என்ற இரு நடிகர்களின் படங்களையும் எஸ் ஜே சூர்யா இயக்கியுள்ளார்.
எஸ் ஜே சூர்யா இயக்கிய முதல் படம் வாலி. 1999 இல் வெளியான இப்படத்தில் அஜித், சிம்ரன், ஜோதிகா என பலர் நடித்து இருந்தனர். இப்படத்தில் தேவா, சிவா என அஜித் இரண்டு மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். வாலி படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.
ராமாயண புராணத்தில் சுக்ரீவனின் சகோதரனான வாலி, சுக்ரீவனின் மனைவியை வைத்திருப்பது போன்ற கதையின் சம்பவத்தை தழுவி வாலி படம் எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் தேவா காது கேட்காத ஊமையாக உள்ளார். அவரின் தம்பி சிவாவின் மனைவி மீது தேவா ஆசைப்படுகிறார்.
கடைசியில் சிவா எப்படி தன் அண்ணனின் சுயரூபம் தெரிந்து மனைவியை காப்பாற்றுகிறார் என்பதே வாலியின் கதை. இப்படத்தின் இயக்குனர் எஸ் ஜே சூர்யா தற்போது நடித்து வரும் கதாபாத்திரங்கள் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
சமீபத்தில் சிம்புவின் மாநாடு படத்தில் எஸ் ஜே சூர்யாவின் கதாபாத்திரம் பெரிதும் பேசப்பட்டது. இந்நிலையில் பேட்டி ஒன்றில் வாலி படத்தில் அஜித் இல்லாமல் வேறு எந்த நடிகர் நடித்திருந்தால் படம் நன்றாக இருக்கும் என எஸ் ஜே சூர்யாவிடம் கேட்டுள்ளனர்.
அதற்கு பதிலளித்த எஸ் ஜே சூர்யா பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடித்து இருந்தால் நன்றாக இருக்கும் என கூறினார். ஏனென்றால் இப்படத்தில் ஹீரோ மற்றும் வில்லன் என இரண்டு கதாபாத்திரங்களுக்கும் ஷாருக்கான் பொருந்துவார் என கூறியுள்ளார். வாலி படத்தில் ஷாருக்கான் நடித்து இருந்தாலும் நன்றாகத்தான் இருக்கும் என ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.