அஜித்குமார் நடிப்பில், வீரம், வேதாளம் படத்திற்குப் பின் சிறுத்தை சிவாவுடன் கூட்டணி அமைத்த படம் விவேகம். இப்படத்தில் அஜித்துடன் இணைந்து காஜல் அகர்வால், விவேக் ஓபராய் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். அனிருத் இசையமைத்திருந்தார். ஆண்டனி, ரூபன் படத் தொகுப்பு செய்திருந்தார். இப்படம் அப்போதே ரூ.130 கோடி பொருட்செலவில் எடுக்கப்பட்டதாக பேசப்பட்ட நிலையில், சத்ய ஜோதி பிலிம்ஸ் இப்படத்தை பிரமாண்டமாக தயாரித்திருந்தது.
இப்படத்தின் கதை, பூமிக்கு அடியில், புதைத்து வைக்கப்பட்டிருக்கும், அணுகுண்டுகளை வெடிக்கச் செய்து, ஒரு நில நடுக்கத்தை உருவாக்கும் கும்பல், மேலும் 2 அணுகுண்டுகளை வெடிக்கச் செய்ய திட்டமிடுகிறது. அப்போது அதை கண்டறிந்து தடுக்க செர்பியாவில் உள்ள பயங்கரவாத தடுப்பு பிரிவு மற்றும் உளவுப்படை களமிறங்குகிறது. அந்த அணியில்தான் அஜித்குமார் இருப்பதாகவும், எந்த நிலையில், எத்தனை சோதனையான காலக்கட்டத்திலும் தன் முயற்சியை கைவிடாதவன்’ என்பதாக இப்படத்தின் கதை பின்னப்பட்டிருந்தது.
இப்படத்தின் டயலாக், வெளி நாட்டில் எதிரிகளுடன் பஞ்ச் வசனம் பேசும் காட்சிகள் எல்லாம் ட்ரோல் செய்யப்பட்டன. ஆனால், அஜித் ரசிகர்கள் அப்போது இதை விடவில்லை. அஜித் படம் என்பதால் தொடர்ந்து முட்டுக் கொடுத்து வந்தனர். இந்த நிலையில், கலவையான விமர்சனங்களைப் பெற்ற இப்படம் தோல்வியடைந்ததற்கான காரணம் பற்றி விவேகம் பட ஒளிப்பதிவாளர் வெற்றிப் ஓபனாகப் பேசியுள்ளார்.
விவேகம் படம் தோல்விக்கான காரணம்
இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது: ‘ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு சிக்கல் வரும். அதுபோல் விவேகம் படத்தின் முன் கூட்டியே ரிலீஸ் தேதியை அறிவித்துவிட்டனர். ரிலீஷுக்கு குறுகிய காலமே இருந்த நிலையில், கிராபிப் காட்சிகளுக்குப் போதிய நேரம் ஒதுக்க முடியவில்லை. இன்னும் 2 மாதங்கள் கூடுதலாக நேரம் கிடைத்திருந்தால், விவேகம் படம் வெற்றிப்படமாக அமைந்திருக்கும்.
ஆனால், ரிலீஸ் தேதியை மாற்றினால் புரடியூசருக்கு சிக்கல் ஏற்படும். இதில் அதிக பணம் போட்டிருந்தால், பைனான்ஸ், பட விநியோகம் இதெல்லாம் இருக்கிறது. விவேகம் படத்தின் ஒட்டுமொத்த ஷூட்டிங்கையும் ஆறே மாதத்தில் முடித்துவிட்டோம். பிரிவியூ பார்க்க கூட நேரமில்லை. இதுபோன்ற சிக்கல்களை ஆரம்பத்திலேயே சரி செய்திருந்தால், இப்படத்தை வெற்றிப்படமாக்கி இருக்கலாம்’ என்று தெரிவித்துள்ளார்.
சினிமாத்துறையினர் கருத்து
அஜித்தின் கேரியரில் அவர் மெனக்கெட்டு நடித்த படம் விவேகம், ஹாலிவுட் ரேஞ்சுக்கு இப்படம் வரும் என்று கூறப்பட்ட நிலையில் ரசிகர்களின் எதிர்ப்பார்வை பூர்த்தி செய்யாததால் இப்படம் தோல்வி அடைந்தது. இருப்பினும் ஆண்டுகள் பல கடந்தும் ஒளிப்பதிவாளர் நேர்மையான இதன் தோல்விக்கான காரணம் பற்றி கூறியது மற்ற படங்களில் இதுபோன்ற சிக்கல்களை சரிசெய்ய உதவும் என சினிமாத்துறையினர் கூறி வருகின்றனர். விவேகம் படம் தோல்வி என்று கூறியதால் அஜித் ரசிகர்கள் வருத்தமடைந்துள்ளனர்.
இப்படம் தோல்வியடைந்ததால்தான் அஜித், சத்யஜோதி நிறுவனத்துக்கு விஸ்வாசம் படத்தில் நடித்துக் கொண்டார். இப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது குறிப்பிடத்தக்கது.