அஜித் தன்னுடைய 61வது திரைப்படத்தை முடித்தபிறகு அடுத்த படமான ஏகே 62 படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்திற்கு நடிக்க இருக்கிறார். இந்த திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்குகிறார். இதுபற்றிய அறிவிப்பு ஏற்கனவே வெளியான நிலையில் தற்போது இந்த படத்தின் கதை இதுதான் என்று ஒரு தகவல் தற்போது இணையத்தில் கசிந்துள்ளது.
அதாவது இந்த படத்தில் அஜித் திருநெல்வேலி பக்கத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பண்ணையார் மகனாக இருக்கிறார். அவர்கள் ஊருக்கே சாப்பாடு போடும் பெரிய குடும்பம். இதில் அஜித் விவசாயம் செய்து, விதைகளை ஆராய்ச்சி பண்ணுகிறார்.
இது போன்ற நல்ல தரமான சாப்பாட்டை மற்றவர்களுக்கும் நாம் ஏன் கொடுக்கக்கூடாது என்று யோசிக்கும் அவர் ஒரு பெரிய ஹோட்டல் ஆரம்பிக்கிறார். அந்த முயற்சியும் நன்றாக போகவே அந்த ஹோட்டல் வளர்ந்து பல இடங்களில் அதன் கிளைகளை தொடங்குகிறார்.
இவர் வளர்ச்சியைப் பார்த்து பொறாமைப்படும் பன்னாட்டு நிறுவனம் ஒன்று இவரை அழிக்க சதி செய்கிறது. அதன் விளைவால் அஜித் ஒரு வேளை சாப்பாட்டுக்கு கூட வழியில்லாமல் கஷ்டத்தில் தள்ளப்படுகிறார். அதிலிருந்து அவர் மீண்டு வந்தாரா இல்லையா என்பதுதான் படத்தின் கதை என்று தற்போது ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
இதே கதை அம்சம் கொண்ட ஒரு திரைப்படத்தை நாம் ரஜினி நடித்து வெளியான சிவாஜி திரைப்படத்தில் பார்த்திருக்கிறோம். அதில் ரஜினி அனைவருக்கும் நல்ல கல்வி கிடைக்க போராடி இறுதியில் வில்லன் செய்த சதியால் கையில் பணம் இல்லாமல் ரோட்டுக்கு வந்து விடுவார்.
இதையே தான் கொஞ்சம் மாற்றி தற்போது அஜித் நடிக்கும் படத்தின் கதை என்று கூறுகின்றனர். மேலும் பட அறிவிப்பே இப்போதுதான் வெளியாகியிருக்கிறது இன்னும் நடிகர் நடிகைகள் தேர்வு கூட முடிந்தபாடில்லை அதற்குள் படத்தின் கதை வெளி வந்து விட்டதே என்று ரசிகர்கள் பலரும் கலாய்த்து வருகின்றனர்.