பாலிவுட் நடிகர் ஷாருக்கான் தொடர்பான ஒரு வைரல் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.தொழிலதிபர் அனந்த் அம்பானி மற்றும் ஆன்மிகத் தலைவர் சத்குரு சந்திப்பின்போது நடைபெற்றதாகக் கூறப்படும் சம்பவத்தை மையமாக வைத்து இந்தப் பிரச்சினை உருவாகியுள்ளது.
சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அனந்த் அம்பானி,சத்குரு ஆகியோருடன் தொடர்புடைய காட்சிகளையும்,ஷாருக்கான் அனந்த் அம்பானியுடன் பேசும் காட்சியையும் இணைத்து இன்ஸ்டாகிராம் பிரபலமான சுவிக்யா சர்மா ஒரு வீடியோவை வெளியிட்டதாகக் கூறப்படுகிறது. அதில்,ஷாருக்கானை அமைதியாக இருக்கும்படி அனந்த் அம்பானி அறிவுறுத்தியதாக அவர் குறிப்பிட்டிருந்தார். இந்த வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி பல்வேறு விமர்சனங்களை உருவாக்கியது.
இதையடுத்து, அந்த வீடியோவில் கூறப்பட்டுள்ள தகவல்கள் உண்மைக்குப் புறம்பானவை என்றும், தனது நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில் தவறாகச் சித்தரிக்கப்பட்டுள்ளதாகவும் ஷாருக்கானின் சட்டக் குழு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக நவம்பர் 23ஆம் தேதி சட்ட நோட்டீஸ் அனுப்பப்பட்டதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும், சர்ச்சைக்குரிய வீடியோவை உடனடியாக நீக்க வேண்டும், அதுதொடர்பான கருத்துகளை மீண்டும் பரப்பக்கூடாது,வெளியிட்ட தகவல்களைத் திருத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளுடன் 48 மணி நேரக் கெடுவும் விதிக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதற்குப் பதிலளித்த சுவிக்யா சர்மா,தனது கருத்துகள் கருத்துச் சுதந்திரத்தின் அடிப்படையிலானவை எனக் கூறி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரத்தில் ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால், வைரல் வீடியோவில் கூறப்பட்ட சம்பவம் உண்மை என இதுவரை உறுதிப்படுத்தப்படாத நிலையில்,சட்ட நோட்டீஸ் அனுப்பப்பட்டிருப்பட்டிருக்கிறது.இதனால் இந்த விவகாரம் அடுத்தகட்டமாக என்ன திருப்பத்தைச் சந்திக்கும் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.




