மிகப்பெரிய தொழில் சாம்ராஜ்யத்தின் முதலாளியான சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சியின் நடிப்பில் தி லெஜண்ட் திரைப்படம் வெளியாகி இருக்கிறது. இவர் திரைப்படத்தில் ஹீரோவாக நடிக்கிறார் என்று கேள்விப்பட்டதுமே ஏகப்பட்ட மீமஸ்களும், ட்ரோல்களும் பட்டையை கிளப்பியது.
அறிவிப்புக்கே அப்படி என்றால் படம் வெளியானால் சொல்லவா வேண்டும். தற்போது அண்ணாச்சியின் படத்தை பற்றியும் அவருடைய நடிப்பை பற்றியும் ஏகப்பட்ட விமர்சனங்கள் சோசியல் மீடியாவை கலக்கிக் கொண்டிருக்கிறது. அதில் அண்ணாச்சிக்கு எதற்கு இந்த வேண்டாத வேலை என்பதுதான் ஒட்டுமொத்த ரசிகர்களின் கருத்தாக இருக்கிறது.
அந்த அளவுக்கு அண்ணாச்சிக்கும், நடிப்புக்கும் கொஞ்சம் கூட ஒத்து வரவில்லை என்பதுதான் நிதர்சனம். பல இடங்களில் அவர் நடிக்க முயற்சி செய்தும் கூட அவருக்கு அது வராமல் போய்விட்டது. மற்றபடி படத்தில் கணக்கு பார்க்காமல் காசை நன்றாக செலவழித்து இருக்கிறார்.
அந்த வகையில் மேக்கப் மேனுக்கு எக்கச்சக்கமாக சம்பளம் கொடுக்கப்பட்டிருக்கும் என்பது அண்ணாச்சியை பார்த்தாலே தெரிந்து விடுகிறது. அந்த அளவுக்கு அவருடைய முகம் முழுவதிலும் மேக்கப் மேன் தன்னுடைய கைவண்ணத்தை காட்டியிருக்கிறார். இதுவே அண்ணாச்சி நடிக்க முடியாமல் போனதற்கு ஒரு காரணமாகவும் இருக்கிறது.
எப்படி என்றால் அளவுக்கு அதிகமான மேக்கப் அண்ணாச்சி முயற்சி செய்து காட்டிய எக்ஸ்பிரஷனை கூட மறைத்து விட்டது. மேலும் கண்ணை கூசும் அளவுக்கு போடப்பட்டுள்ள மேக்கப் அண்ணாச்சியை ஒரு ரோபோ போன்று காண்பித்து விட்டது.
அதனால் சென்டிமென்ட், ரொமான்ஸ் போன்ற எல்லா காட்சிகளிலும் அவர் ஒரே மாதிரி தான் முகத்தை வைத்திருக்கிறார். இதைத்தான் தற்போது பலரும் கிண்டலடித்து கொண்டிருக்கின்றனர். ஒரு ஹீரோவாக அவருக்கு இந்த சினிமாத்துறை ஒத்துவரவில்லை என்றாலும் தயாரிப்பாளராக அவர் தரமான படங்களை தயாரிக்கலாம்.
ஏனென்றால் பட்ஜெட்டை மீறி செலவானாலே கோபப்படும் தயாரிப்பாளர்களுக்கு மத்தியில் அண்ணாச்சி கோடிகளை கொட்டி படத்தை எடுத்துள்ளார். அண்ணாச்சியின் இந்த மனதை தெரிந்து கொண்ட ஒரு கூட்டம் அவரை நன்றாகவே ஏமாற்றி விட்டார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.
அந்த வகையில் அவர் இந்த படத்தில் ஒரு கோமாளியாக காட்டப்பட்டு விட்டார் என்பது தான் உண்மை. இதற்குப் பிறகாவது அண்ணாச்சி இது போன்ற வீண் முயற்சியில் இறங்காமல் இருப்பது நல்லது. ஆனாலும் இந்த படத்தின் மூலம் ஏகப்பட்ட சினிமா தொழிலாளர்களை வாழ வைத்த அண்ணாச்சியை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.