தமிழ் சினிமாவில் இப்போது திரில்லர் படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அதனால் முன்னணி நடிகர்கள் பலரும் சஸ்பென்ஸ், திரில்லர் கதைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர். அதிலும் நடிகர் அருள்நிதி அதுபோன்ற கதைகளை தான் அதிகமாக தேர்வு செய்து நடித்து வருகிறார்.
அந்த படங்களும் அவருக்கு நன்றாகவே கை கொடுக்கிறது. அந்த வகையில் தற்போது அவரின் நடிப்பில் தேஜாவு திரைப்படம் வெளியாகி இருக்கிறது. பல சஸ்பென்ஸ்கள் அடங்கிய திரில்லர் படமாக வெளிவந்திருக்கும் இந்த படத்திற்கு தற்போது பல பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்து வருகிறது.

அந்த வகையில் படத்தை பார்த்த பலரும் தங்கள் விமர்சனங்களை ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து வருகின்றனர். அதில் வழக்கம் போல அருள் நிதியின் நடிப்பு நன்றாக இருக்கிறது என்றும், அதிக ஆர்ப்பாட்டம் இல்லாமல் இருக்கும் அவருடைய நடிப்பு படத்திற்கு பொருத்தமாக இருக்கிறது என்றும் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் படத்தின் பல காட்சிகள் ரொம்பவும் சஸ்பென்ஸாகவும், எமோஷனல் கலந்தும் கொடுத்திருப்பது ரசிகர்களை கவர்ந்துள்ளது. இதனால் அறிமுக இயக்குனர் அரவிந்துக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.

அதிலும் யாரும் எதிர்பார்க்காத அந்த கிளைமாக்ஸ் காட்சியும் ரசிகர்களை ரொம்பவே இம்ப்ரஸ் செய்துள்ளது. ஒரு கடத்தல் வழக்கை கண்டுபிடிக்க வரும் அதிகாரியாக நடித்திருக்கும் அருள்நிதி பெர்பார்மன்ஸில் ஸ்கோர் செய்துள்ளதாகவும் ரசிகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் ஜிப்ரானின் இசையும், மதுபாலா, காளி வெங்கட் போன்ற கதாபாத்திரங்களின் நடிப்பும் படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளது. ஆக மொத்தம் அருள்நிதி இந்த திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பொய்யாக்காமல் காப்பாற்றி இருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்.