தினேஷ், ஹரிஷ் கல்யாணின் லப்பர் பந்து சிக்ஸர் அடித்ததா.? படம் எப்படி இருக்கு, முழு விமர்சனம்

Lubber Pandhu Movie Review: இன்று கிட்டத்தட்ட ஏழு படங்கள் வெளியாகி இருக்கும் நிலையில் அட்டகத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண் கூட்டணியில் உருவாகி இருக்கும் லப்பர் பந்து பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. தமிழரசன் பச்சைமுத்து இயக்கி இருக்கும் இப்படம் கிரிக்கெட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது.

இந்த வருடத்தில் ஏகப்பட்ட கிரிக்கெட் சார்ந்த படங்கள் வெளிவந்தது. அந்த வரிசையில் வெளிவந்திருக்கும் இந்த லப்பர் பந்து சிக்ஸர் அடித்ததா என்பதை பின்வரும் விமர்சனத்தின் மூலம் இங்கு விரிவாக காண்போம்.

கதை கரு

உள்ளூர் பேட்ஸ்மேன் ஆக கெத்தாக வரும் அட்டகத்தி தினேஷ் பல போட்டிகளில் கலந்து கோப்பைகளை பெறுகிறார். இவரை ஜெயிக்க யாரும் கிடையாது என்னும் அளவுக்கு இவருடைய ஆட்டம் இருக்கிறது. ஆனால் இவரை தோற்கடிக்க வேண்டும் என ஹரிஷ் கல்யாண் களம் இறங்குகிறார்.

அதில் இருவருக்கும் நடக்கும் ஈகோ கலந்த மோதல் தான் படத்தின் மையக்கரு. இதில் அன்புவாக வரும் ஹரிஷ் கல்யாண் தினேஷின் மகள் சஞ்சனாவை காதலிக்கிறார். இவர்களின் காதல் நிறைவேறியதா? ஈகோ முடிவுக்கு வந்ததா? என்பதை இயக்குனர் கலகலப்பாக சொல்லி இருக்கிறார்.

நிறை குறைகள்

அறிமுக இயக்குனர் என நம்ப முடியாத அளவுக்கு திரைக்கதையை கொண்டு சென்றதற்கே அவரை பாராட்டலாம். அதே போல் இரண்டு ஹீரோக்களுக்கு இடையே நடக்கும் ஈகோவால் ஏற்படும் பாதிப்புகள் குடும்பத்தினர் அல்லாடுவது போன்றவற்றை நகைச்சுவையாக அவர் கொண்டு சென்ற விதமும் ரசிக்க வைத்துள்ளது.

அதேபோல் அங்கங்கு சில அரசியல், ஜாதி என சமூகத்தில் நிலவும் விஷயங்களையும் வெளிச்சம் போட்டு காட்டி இருக்கிறார். கிரிக்கெட் படம் என்பதால் அதைப் பற்றி மட்டுமே காட்டாமல் அனைத்து விஷயத்திலும் அவர் கவனம் செலுத்தி திரைக்கதையை கொண்டு சென்ற விதமும் பாராட்ட வைத்துள்ளது.

இதில் அட்டகத்தி தினேஷ் தன்னுடைய வழக்கமான யதார்த்த நடிப்பை கொடுத்திருக்கிறார். ஹரிஷ் கல்யாணை பார்த்து கோபப்படும் காட்சியிலும் மனைவியிடம் பயப்படும் காட்சியிலும் ஸ்கோர் செய்துள்ளார். அவருடைய மனைவியாக வரும் சுவாசிகாவும் நடிப்பில் மிரட்டி இருக்கிறார்.

அதேபோல் ஹரிஷ் கல்யாணின் நடிப்பு படத்திற்கு படம் மெருகேறி இருக்கிறது. வசன உச்சரிப்பு, முகபாவனை என அனைத்துமே குறை சொல்ல முடியாத அளவுக்கு இருக்கிறது. அதை தாண்டி அட்டகத்தி தினேஷ் விஜயகாந்த் ரசிகராக வருவதால் அது குறித்த ரெஃபரன்ஸ் பெரும்பலமாக இருக்கிறது.

அதேபோல் பின்னணி இசை, பாடல்கள் அனைத்துமே சிறப்பாக இருக்கிறது. இப்படி கலகலப்பாக ரசிக்கும் வகையில் வந்திருக்கும் இந்த லப்பர் பந்தை தாராளமாக தியேட்டரில் பார்க்கலாம்.

சினிமா பேட்டை ரேட்டிங்: 3.25/5

அட்டகத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண் கூட்டணி எப்படி இருக்கு.?

Trending News

- Advertisement -spot_img