புதன்கிழமை, ஜனவரி 15, 2025

சௌகார் ஜானகியை காப்பாற்றிய ஏவி மெய்யப்ப செட்டியார்.. மெய் சிலிர்த்த சிவாஜி

பல்வேறு காலகட்டங்களில் பல தரமான திரைப்படங்களை நமக்கு கொடுத்து இன்றும் முன்னணி தயாரிப்பு நிறுவனமாக இருப்பது ஏவிஎம் புரொடக்ஷன்ஸ். இந்த மிகப்பெரிய சாம்ராஜ்யத்தின் அதிபராக இருந்தவர் ஏவி மெய்யப்ப செட்டியார்.

இவரின் தயாரிப்பில் ஏராளமான திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. அதில் ஒன்று சிவாஜி, சௌகார் ஜானகி, வாணிஸ்ரீ, மேஜர் சுந்தரராஜன் உள்ளிட்ட பலர் நடித்த உயர்ந்த மனிதன் திரைப்படம். அதில் சௌகார் ஜானகி, சிவாஜிக்கு மனைவியாக கௌரவ வேடத்தில் நடித்து இருப்பார்.

அந்த படத்தின் படப்பிடிப்பின்போது நடந்த ஒரு சுவாரசியமான நிகழ்வு தற்போது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அது என்னவென்றால் அந்த படத்தின் ஒரு காட்சியில் சௌகார் ஜானகி அணிந்து இருந்த இரவு உடை மிகவும் மெல்லிய துணியில் தைக்கப்பட்ட ஆடையாக இருந்துள்ளது.

அந்த ஆடையை அணிந்து கொண்டு தான் அவர் அந்த காட்சியில் நடித்து முடித்தார். படப்பிடிப்பு முடிந்தவுடன் அந்த காட்சிகளை போட்டு பார்த்த மெய்யப்ப செட்டியார் இரவு உடையில் இருக்கும் சௌகார் ஜானகி பார்த்து அதிர்ந்துள்ளார்.

ஏனென்றால் அதில் அவர் அணிந்திருந்த அந்த உடையில் அவர் உள்ளே போட்டிருந்த ஆடை கூட அப்பட்டமாக வெளியே தெரிந்திருக்கிறது. அதை கவனித்த மெய்யப்ப செட்டியார் உடனே அந்த காட்சியை திரும்ப எடுக்க வேண்டும் என்று இயக்குனருக்கு தெரிவித்துள்ளார்.

அதற்கு அவருடைய மேனேஜர் செட்டை முழுவதுமாக அகற்றி விட்டோம் என்று கூறியிருக்கிறார். ஆனால் மெய்யப்ப செட்டியார் அதனால் என்ன உடனே திரும்ப செட்டை போட்டு அந்த காட்சியை படமாக்குங்கள் என்று கூறிவிட்டார். அதற்கு 50 ஆயிரம் செலவாகும் என்று கூறிய பின்பும் அவர் அந்த காட்சியை மீண்டும் படமாக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.

அந்த சமயத்தில் அந்தப் படத்தில் நடித்த சிவாஜிக்கே சம்பளம் ஒரு லட்சத்து 25 ஆயிரம் மட்டும் தான். ஆனாலும் மெய்யப்ப செட்டியார் பணத்தைப் பற்றிக் கவலைப்படாமல் 50 ஆயிரம் செலவு செய்து அந்த செட்டை திரும்ப போட்டு அந்த காட்சியை படமாக்கினார்.

அதன்பிறகுதான் அந்த படம் வெளிவந்தது. தன் படத்தில் நடிக்கும் நடிகையாக இருந்தாலும் அவருடைய கௌரவம் காக்கப்பட வேண்டும் என்று நினைத்து செய்த மெய்யப்ப செட்டியாரின் இந்த செயல் அப்போது படக்குழுவினரை மெய்சிலிர்க்க வைத்தது.

Trending News