செவ்வாய்க்கிழமை, நவம்பர் 19, 2024

என்றும் நினைவில் இருக்கும் சின்ன கலைவாணர்.. மறக்க முடியாத 6 கேரக்டர்கள்

Vivek: இரட்டை அர்த்த வசனங்கள், உருவ கேலி இல்லாமல் மக்களை சிரிக்க வைக்கவும், சிந்திக்க வைக்கவும் தெரிந்தவர் தான் சின்னக் கலைவாணர் விவேக். எதிர்பாராமல் இந்த கலைஞன் ரொம்ப சீக்கிரமே நம்மை விட்டுப் போயிருந்தாலும், இவருடைய படைப்புகள் இன்னும் நூறு ஆண்டு காலத்துக்கு நின்று பேசக்கூடிய ஒன்று. விவேக் தரமான நடிப்பில் நம் மனதில் என்றும் நீங்காத ஆறு கேரக்டர்களை பற்றி பார்க்கலாம்.

மறக்க முடியாத 6 கேரக்டர்கள்

எமோஷனல் ஏகாம்பரம் (உத்தமபுத்திரன்): வடிவேலு மற்றும் செந்தில் அடி வாங்கினால் நமக்கு சிரிப்பு வரும். கவுண்டமணி அடிச்சா நமக்கு சிரிப்பு வரும். ஆனா வசனமே இல்லாம முக பாவனை வைத்து ஒரு கலைஞனால் சிரிப்பு காட்ட முடியும் என்றால் அது விவேக் தான். உத்தமபுத்திரன் படத்தில் எமோஷனல் ஏகாம்பரம் என்று ஒரு கேரக்டர். தன்னுடைய சப்கான்ஷியஸ் மெமரி பவரால் தான் இதெல்லாம் நடக்கிறதா, இல்லை தனுஷ் தன்னை ஏமாற்றுகிறாரா என்று புரியாமல் படம் முழுக்க முகபாவணையைக் காட்டியே சிரிக்க வைத்திருப்பார்.

விட்டல் (புதுப்புது அர்த்தங்கள்): ‘இன்னைக்கு செத்தா நாளைக்கு பாலு’ விவேக்கை மக்களுக்கு அடையாளப்படுத்திய வசனம் என்று கூட சொல்லலாம். பணத்திமிர் பிடித்த ஜெயசித்திராவிடம் வேலை பார்க்கும் விவேக் ஒரே போன் காலால் அவரை அலற விடுவது, பின் உண்மை தெரிந்து அடி வாங்குவது என முதன் முதலாக ஒரு நகைச்சுவை நடிகனாக காலடி எடுத்து வைத்தார்.

திருநெல்வேலி: விவேக் சின்ன கலைவாணர் என பெயர் வாங்க முதன் முதலில் வித்திட்ட படம் தான் திருநெல்வேலி. பெரியாரின் சமூக கருத்துக்களை கலைவாணர் என் எஸ் கிருஷ்ணனுக்கு பிறகு சினிமாவில் பேசியது விவேக் தான். இன்னும் 1000 பெரியார் வந்தாலும் உங்கள திருத்த முடியாது என இவர் பேசிய வசனம் இன்று வரை பிரபலம்.

வெங்கடராமன்- சாமி: விக்ரம் நடித்த சாமி படத்தில் விவேக் துணிச்சலாக தீண்டாமையை பற்றி பேசியிருப்பார். யானைக்கு நாமம் போடுவது, ட்ராபிக் போலீஸ் பிரச்சனை, பள்ளி படிப்பு என சமுதாயத்தின் நிலைமையை தெள்ள தெளிவாக பேசியிருப்பார்.

மோகன்-ரன்: விவேக்கின் நகைச்சுவையை பட்டி தொட்டியெங்கும் ரசித்த படம் என்றால் அது ரன் தான். படத்தின் பெரிய வெற்றிக்கும் காரணமாக அமைந்தது. கிராமத்தில் இருந்து வரும் மக்கள் சென்னையில் எப்படி அவதி படுகிறார்கள் என்பதை சென்னை வாசிகளே ரசிக்கும் அளவுக்கு சொல்லியிருப்பார்.

மங்களம் சார் – பாய்ஸ்: இயக்குனர் ஷங்கருடன் விவேக் முதன் முதலில் இணைந்த படம் தான் பாய்ஸ். பல கனவுகளை சுமந்து, பெற்றோரின் ஆதரவுக்கு எங்கும் இளைஞர்கள் ஒவ்வொருவருக்கும் மங்களம் சார் போன்ற தன்னம்பிக்கை கூட இருப்பது அவர்களுடைய வாழ்க்கையையே மாற்றும்.

அசால்ட் ஆறுமுகம் – படிக்காதவன்: கிட்டத்தட்ட நானும் ரவுடி தான் படத்துக்கு முன்னோட்டமே இந்த அசால்ட் ஆறுமுகம் தான். காக்கி நாடா உனக்கு பாவாடை நாடா எனக்கு என ஆந்திராவின் தாதா சுமனிடம் பேசி விட்டு, கிழிந்த சட்டையுடன் கம்பீரமாக நடந்து வரும் விவேக், வயிறு குலுங்க சிரிக்க வைத்திருப்பார்.

- Advertisement -spot_img

Trending News