வெள்ளிக்கிழமை, ஜனவரி 3, 2025

30 வருடங்கள் கழித்து பாக்யராஜுடன் மீண்டும் இணையும் நடிகை.. எதிர்பார்ப்பை அதிகரித்த ஜோடி

தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக வலம் வந்தவர் பாக்யராஜ். சிறந்த கதையை ரசிகர்கள் கவரும் வண்ணம் இவர் கொடுப்பதால் திரைக்கதை மன்னன் என்று அழைக்கப்படும் பெருமைக்குரியவர். ஒரு இயக்குனராக மட்டுமல்லாமல் இவர் ஹீரோவாகவும் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.

அந்த வகையில் இவர் இயக்கி நடித்த முந்தானை முடிச்சு உள்ளிட்ட பல திரைப்படங்கள் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளது. இன்றும் இவர் இயக்கிய அந்த திரைப்படங்களை பார்த்தால் கொஞ்சம் கூட சலிப்பு வராமல் அவ்வளவு சுவாரஸ்யமாக இருக்கும்.

புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் தீவிர ரசிகரான இவர் அவருக்கு ஒரு செல்லப் பிள்ளையும் கூட. இவரின் பல வெள்ளிவிழா திரைப்படங்களுக்கும் எம்ஜிஆர் கலந்து கொண்டு அவரை ஆசிர்வதித்து உள்ளார். அந்த வகையில் ஏராளமான ரசிகர்களை வைத்துள்ள இவர் தற்போது குணச்சித்திர நடிகராக பல படங்களில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் இவர் மகன் சாந்தனு உடன் இணைந்து முருங்கைக்காய் சிப்ஸ் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். அதன்பிறகு இவர் மீண்டும் ஒரு தமிழ் திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தில் இவருடன் இணைந்து நடிகை ஐஸ்வர்யா நடிக்க இருக்கிறார்.

இவர்கள் இருவரும் 1992 ம் ஆண்டு ராசுகுட்டி என்ற திரைப்படத்தில் ஜோடியாக நடித்திருக்கின்றனர். சென்டிமென்ட் மற்றும் நகைச்சுவை கலந்து எடுக்கப்பட்ட அந்த திரைப்படம் அவர்களுக்கு ஒரு சூப்பர் ஹிட் படமாக அமைந்தது. அதன் பிறகு இவர்கள் சுயம்வரம் என்ற திரைப்படத்தில் நடித்து இருந்தாலும் ஜோடியாக நடிக்கவில்லை.

தற்போது 30 வருடங்களுக்கு பிறகு இந்த ஜோடி மீண்டும் ஒரு படத்தில் இணைகின்றனர். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தில் நடிப்பதன் மூலம் மீண்டும் அவர்கள் அதே துடிப்புடன் நடிக்க இருப்பதாக தற்போது ஒரு பேட்டியில் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.

Trending News