வியாழக்கிழமை, ஜனவரி 9, 2025

3 ராஜமவுலி ஹீரோக்களையும் வளைக்க சதி.. கேஜிஎப் பட இயக்குனர் போட்ட மாஸ்டர் பிளான்

ஒரு படத்தின் மாபெரும் வெற்றி அந்த படத்தில் பணியாற்றும் நபர்களுக்கு மிக பெரிய அங்கீகாரத்தையும், அவர்களின் அடுத்த படங்களின் மேல் எதிர்பார்ப்பையும் கூட்டி விடுகிறது. மேலும் அந்த படத்தின் இயக்குனரோ இல்லை நடிகரோ மற்றொரு வெற்றி படத்தின் நபரோட கூட்டணி அமைக்கும் பட்சத்தில் அதன் எதிர்பார்ப்பும், வணிகமும் மாபெரும் அளவில் நடப்பது சகஜமே. அந்த வகையில் தற்போது ஒரு இயக்குனரின் அடுத்தடுத்த படங்களின் அறிவிப்புகள் வெளிவந்து எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.

கே.ஜி.எஃப் படத்தின் மாபெரும் வெற்றி அந்த படத்தின் இயக்குனரான பிரஷாந்த் நீல் இந்தியளவில் முக்கிய இயக்குனராக மாறியுள்ளார். உண்மையில் கன்னட படமான கே.ஜி.எஃப் கன்னடம் தவிர்த்து தமிழ்,தெலுங்கு,மலையாளம், ஹிந்தி என 4 மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியாகி மிக பெரிய வசூலை வாரிக் குவித்தது. இதன் வெற்றி பின்னர் தற்போது பிரஷாந்த் நீல்’ன் அடுத்த மூன்று படங்களின் நாயகர்கள் யார் என அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளிவந்துள்ளன.

பிரஷாந்த் நீல் தற்போது சலார் படத்தை இயக்கி வருகிறார். பாகுபலி நாயகன் பிரபாஸ் நடிக்கும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்து வருவது அனைவரும் அறிந்ததே. கே.ஜி.எஃப் தயரிப்பாளரான ஓம்பலே பிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து வருகிறது. மலையாள நடிகர் பிரித்விராஜ் இந்த படத்தில் வில்லனாக நடிக்கவுள்ளார் என்பது கூடுதல் தகவல். இந்த படம் அடுத்த ஆண்டு கோடையில் வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் ஏற்கனவே அறிவித்து உள்ளது.

அதனை அடுத்து பிரஷாந்த் நீலுடன் தெலுங்கு முன்னணி நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் இணைய உள்ளார். ஆக்ஷன் படங்களுக்கு பெயர் போன ஜூனியர் என்.டி.ஆரும் பிரஷாந்த் நீலும் இணையும் இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் பிரமாண்ட பொருட்செலவில் தயாரிக்க உள்ளது. அண்மையில் இதனை குறித்து பேசுகையில் நான் நீண்ட நாட்களாகவே ஜூனியர் என்.டி.ஆரின் மிக பெரிய ரசிகன். உங்களை போலவே நானும் இந்த படத்திற்கு காத்துள்ளேன் இயக்குனர் பிரஷாந்த் நீல் கூறியுள்ளார்.

கே.ஜி.எஃப் படத்தை பார்த்த சிரஞ்சீவி தன்னுடைய வீட்டிற்கு இயக்குனர் பிரஷாந்த் நீல்லை அழைத்து விருந்து வைத்துள்ளார். பின்னர் அடுத்தடுத்து தெலுங்கு நாயகர்களுடன் கைக்கோர்க்கும் பிரஷாந்திடம் தன்னுடைய மகனும் தெலுங்கு சினிமாவின் மற்றொரு முன்னணி நடிகரான ராம் சரணை ஒரு படத்தில் இயக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். அதன் அடிப்படையில் தற்போது பிரஷாந்த் நீல்-ராம் சரண் கூட்டணி இணைவதை அதனை தயாரிக்கவுள்ள டிவிவி தனய்யா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதில் சுவாரசிய விஷயம் என்னவென்றால் பிரபாஸ், ஜூனியர் என்.டி.ஆர், ராம் சரண் ஆகிய மூவரும் அடுத்தடுத்து ராஜமௌலியின் படங்களில் நடித்தவர்கள் ஆவார்கள். பாகுபலியில் பிரபாஸும், தற்போது வெளியாகி வசூல் வேட்டை நடத்தி வரும் ஆர்.ஆர்.ஆர் படத்தில் ஜூனியர் என்.டி.ஆர், ராம் சரண் ஆகியோர் நடித்துள்ளனர். இதற்கிடையில் வருகிற 14ஆம் தேதி கே.ஜி.எஃப் 2 படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் மாபெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாக உள்ளது,.

Trending News