வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

வலிமை படத்திற்கு ஓவர் சென்டிமென்ட் பார்க்கும் போனி கபூர்.. பய புள்ளைங்க பொய் சொல்லிட்டாங்க போல

ஹிந்தியில் ஏராளமான திரைப்படங்களை தயாரித்து தற்போது தமிழ் மொழியில் பல திரைப்படங்களை தயாரித்து வருபவர் போனிகபூர். நேர்கொண்ட பார்வை திரைப்படத்திற்கு பிறகு அவர் மீண்டும் அஜித்துடன் வலிமை திரைப்படத்தின் மூலம் கூட்டணி அமைத்துள்ளார்.

இந்தப் படம் கடந்த பொங்கலுக்கு வெளியாக இருந்த நிலையில் சில பல தடைகளால் தற்போது பிப்ரவரி 24ஆம் தேதி உலக அளவில் வெளியாக இருக்கிறது. போனி கபூர் ஏன் இந்த நாளில் படத்தை வெளியிடுகிறார் என்பது பற்றிய ஒரு சுவாரசியமான தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது போனி கபூர் தமிழில் மிகவும் பிரபல நடிகையாக இருந்த ஸ்ரீதேவியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு ஸ்ரீதேவி மும்பையில் ஹிந்தி திரைப்படங்களில் நடித்துக் கொண்டு அங்கேயே செட்டிலாகிவிட்டார். அவர்களுக்கு இரு மகள்கள் உள்ள நிலையில் சில வருடங்களுக்கு முன் பிப்ரவரி 24 அன்று ஸ்ரீதேவி மரணம் அடைந்தார்.

தன் மனைவியின் நினைவு நாளை ஒட்டி தான் போனிகபூர் வலிமை திரைப்படத்தை அந்த தேதியில் வெளியிட முடிவு செய்துள்ளார். மேலும் அவர் இதே சென்டிமென்டை தான் தயாரிக்கும் மற்றொரு திரைப்படத்திற்கும் பயன்படுத்தியுள்ளார்.

மூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அவதாரம் எடுத்த ஆர்ஜே பாலாஜி தற்போது வீட்ல விசேஷங்க என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். இதில் அபர்ணா பாலமுரளி, சத்யராஜ், ஊர்வசி உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் போனி கபூர் பிப்ரவரி 24 அன்று வெளியிட திட்டமிட்டுள்ளார். இது நாள் வரை வலிமை திரைப்படம் அரசாங்கம் 100 சதவீத இருக்கைகள் தர மறுப்பதால் தான் தள்ளிப் போயிருக்கிறது என்று படக்குழு அறிவித்திருந்தது. ஆனால் போனி கபூரின் இந்த ஸ்ரீதேவி சென்டிமென்ட்டை வைத்து பார்க்கும் பொழுது அந்த அறிவிப்பு எல்லாம் சும்மாவா என்ற கேள்வியும் எழுகிறது.

Trending News