மலையாளத்தில் முன்னணி நடிகையாக இருப்பவர் பார்வதி நாயர். இவர் தமிழில் உத்தம வில்லன், மாலை நேரத்து மயக்கம், எங்கிட்ட மோதாதே, நிமிர், சீதக்காதி, என்னை அறிந்தால், கோடிட்ட இடங்களை நிரப்புக உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.
சென்னையில் வசித்து வரும் இவரது வீட்டில் 2022 ஆம் ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் காணாமல் போனதாகவும் அதில் வீட்டில் பணிபுரிந்த சுபாஷ் என்பவர் மீது சந்தேகம் இருப்பதாகவும் குறிப்பிட்டு நுங்கம்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
அதில், எனது வீட்டில் பணிபுரிந்து வந்த புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த சுபாஷ் சந்திரபோஸ் என்பவர் மீது சந்தேகம் இருக்கிறது’ என்று கூறியிருந்தார். இதையடுத்து சுபாஷ் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஆனால் இவர் புகார் அளிப்பதற்கு முன்பே சுபாஷும் தன்னை தாக்கியதாக குற்றம் சாட்டி, நடிகை மீது புகார் அளித்தார்.
இந்த விவகாரம் பரபரப்பை கிளப்பிய நிலையில், நடிகை பார்வதி நாயர் மீண்டும் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில், ‘எனது புகழை கெடுக்கும் வகையில் என்னை பற்றி சமூகவலைதளங்களில் தவறான தகவல்கள் பரப்பப்படுகிறது. எனக்கு செல்போன் மூலம் கொலை மிரட்டல் வருகிறது. இதற்கு காரணம் சுபாஷ் சந்திர போஸ்’ என்று கூறியிருந்தார். இதையடுத்து மீண்டும் 2வது முறையாக சுபாஷ் சந்திர போஸ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
நடிகைக்கு முன்னுரிமை கொடுத்து சுபாஷ் கொடுத்த புகாரை விசாரிக்காமல் இருந்ததால், என் புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடுத்தார். இதை தொடர்ந்து கோர்ட் உடனடியாக நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியதை தொடர்ந்து, பார்வதி நாயர் உட்பட 7 பேர் மீது வழக்கு பதிவு செய்ய பட்டுள்ளது.
இதில் அயலான் பட தயாரிப்பாளரும் இணைந்திருப்பது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் மீதும் 3 பிரிவுகளின் கீழ் தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கோட் படத்தில் கவனம் ஈர்த்த நடிகை தொடர்ந்து அடுத்த படங்களில் கமிட் ஆவார், என்று பார்த்தால், அயலான் பட தயாரிப்பாளருடன் சேர்ந்து கேஸில் சிக்கி இருக்கிறார்.