அண்மைக்காலமாகவே மலையாள திரைப்படங்களுக்கு தமிழ் ரசிகர்களிடம் அமோக ஆதரவு கிடைத்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் குறைந்த பட்ஜெட்டில் தரமான கதைகளை மலையாள திரையுலகம் கொடுப்பது தான். அந்த வகையில் தற்போது வெளிவந்து வசூலில் சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கும் 2018 அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்துள்ளது.
கடந்த மே 5 ஆம் தேதி வெளியான இப்படம் 15 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு 135 கோடி வரை வசூல் லாபம் பார்த்திருக்கிறது. ஒட்டுமொத்த ரசிகர்களாலும் கொண்டாடப்பட்டு வரும் இந்த படம் தற்போது தமிழிலும் வெளிவர இருக்கிறது. அதற்கான ட்ரெய்லரை பட குழு தற்போது வெளியிட்டுள்ளது. ஏற்கனவே மலையாள பதிப்பை பார்த்து வியந்து போன ரசிகர்கள் அதன் தமிழாக்கத்தை காணவும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
அந்த வகையில் இந்த ட்ரெய்லரின் ஆரம்பத்திலேயே கனமழையின் காரணமாக இடுக்கி அணை திறக்கப்படும் என்ற அறிவிப்போடு ஆரம்பிக்கிறது. அதை தொடர்ந்து ஒவ்வொரு சூழ்நிலையில் வாழும் மனிதர்களைப் பற்றியும், கடும் மழையால் அவர்கள் படும் அவதியையும் ட்ரெய்லர் தெளிவாக காட்டுகிறது.
அது மட்டுமின்றி திறக்கப்பட்ட அணையின் மூலம் கேரளா எந்த அளவுக்கு ஒரு பாதிப்பை சந்திக்கிறது என்பதையும், அதைத்தொடர்ந்து நடக்கும் மீட்பு பணிகளும் காட்சி வடிவில் பார்க்கும் போதே பதட்டத்தை ஏற்படுத்துகிறது. இவ்வாறாக வெளிவந்துள்ள ட்ரெய்லர் கேரளாவில் கடந்த 2018 ஆம் ஆண்டு நடந்த உண்மை சம்பவம் ஆகும்.
அந்த சமயத்தில் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த கேரளா மாநிலத்திற்காக ஒட்டுமொத்த மக்களும் இணைந்து உதவியது குறிப்பிடத்தக்கது. அப்படி ஒரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருந்த இந்த படம் தற்போது தமிழில் வர இருப்பது ரசிகர்களால் பெரிதும் வரவேற்கப்படுகிறது.
அந்த வகையில் இப்படத்தில் டோவினோ தாமஸ், வினீத் ஸ்ரீனிவாசன், லால் உட்பட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். மலையாளத்தில் மிகப்பெரும் வெற்றி திரைப்படமாக மாறி இருக்கும் இந்த 2018 தமிழிலும் வசூலை வாரி குவிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. அதன் அடிப்படையில் விரைவில் வரவிருக்கும் இப்படத்திற்கு இப்போதே எதிர்பார்ப்பு கூடியிருக்கிறது.