சினிமா Vs யூடியூப்: டிஜிட்டல் ஸ்டார்களின் வருகையால் முன்னணி நடிகர்களின் சிம்மாசனம் ஆடுகிறதா?

ஒரு காலத்தில் சினிமாவில் நுழைய வேண்டுமானால் ஸ்டுடியோ வாசலில் தவம் கிடக்க வேண்டும். ஆனால் இப்போது, ஒரு கேமரா மற்றும் நல்ல கன்டென்ட் இருந்தால் போதும், நேராக தியேட்டருக்கே வந்துவிடலாம் என்பதற்குப் பிரதீப் ரங்கநாதன் ஒரு ஆகச்சிறந்த உதாரணம். யூடியூபில் பிரபலமான முகங்கள் ஹீரோக்களாக வரும்போது, அவர்களுக்கு ஏற்கனவே ஒரு ‘ரெடிமேட்’ ஆடியன்ஸ் இருப்பது மிகப்பெரிய பிளஸ் பாயிண்ட். இது முன்னணி நடிகர்களின் மார்க்கெட்டைப் பாதிக்குமா என்றால், அதற்குப் பதில் கொஞ்சம் சிக்கலானதுதான்.

யார் மார்க்கெட் குறையும்?

உண்மையைச் சொல்லப்போனால், விஜய், அஜித் போன்றவர்கள் மார்க்கெட்டை இவர்களால் இப்போதைக்கு அசைக்க முடியாது. ஆனால், வளர்ந்து வரும் இரண்டாம் கட்ட நடிகர்களுக்கு இது ஒரு மிகப்பெரிய சவாலாக இருக்கும். ஒரு சாதாரண நடுத்தர பட்ஜெட் படத்தில் அறிமுக நடிகரை வைத்து எடுப்பதற்குப் பதில், மில்லியன் கணக்கில் பாலோயர்களை வைத்திருக்கும் ஒரு யூடியூபரை ஹீரோவாகப் போட்டால், படத்திற்குத் தானாகவே விளம்பரம் கிடைத்துவிடுகிறது. இது முன்னணி நடிகர்களின் இடத்தைப் பறிக்காது என்றாலும், அவர்களுக்கான ‘ஸ்கிரிப்ட்’ வாய்ப்புகளை இந்த இளைஞர்கள் தட்டிப்பறிக்க அதிக வாய்ப்புள்ளது.

இன்றைய 2K கிட்ஸ் மற்றும் இளைஞர்கள், திரையில் தங்களுக்கு நெருக்கமான, தங்களைப் போலவே இருக்கும் மனிதர்களைப் பார்க்க விரும்புகிறார்கள். யூடியூபர்கள் ஏற்கனவே ரசிகர்களுடன் தினசரி தொடர்பில் இருப்பதால், அவர்கள் திரையில் வரும்போது ஒருவிதமான ‘தோழமை’ உணர்வு ஏற்படுகிறது.

இதனால் முன்னணி நடிகர்களின் பிம்பம் மெல்ல மெல்ல உடைந்து வருகிறது. ரசிகர்கள் இப்போது “ஸ்டார் வேல்யூ”வை விட “கன்டென்ட்”டுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

2026-ன் சினிமா வணிகத்தில் ஒரு புது மாற்றம் என்னவென்றால், தயாரிப்பாளர்கள் ஒரு ஹீரோவைத் தேர்ந்தெடுக்கும்போது அவரது ‘சோஷியல் மீடியா ரீச்’ எவ்வளவு என்று பார்க்கிறார்கள். முன்னணி நடிகர்கள் வருடத்தில் ஒரு படம் கொடுக்கிறார்கள் என்றால், யூடியூபர்கள் வாரம் ஒரு வீடியோ மூலம் ரசிகர்களைத் தங்கள் பிடியிலேயே வைத்திருக்கிறார்கள்.

இந்த ‘டிஜிட்டல் ஃபுட்பிரிண்ட்’ தான் விநியோகஸ்தர்களை இவர்களை நோக்கி இழுக்கிறது. உதாரணமாக, ஒரு யூடியூபர் ஹீரோவாக நடிக்கும் படத்தின் ‘ப்ரோமோஷன்’ செலவு, ஒரு முன்னணி நடிகரின் படத்திற்குச் செய்யப்படும் செலவில் பாதியாகக் குறைகிறது.

யூடியூப் ஸ்டார்ஸ் ஹீரோக்களாக வரும்போது, அவர்கள் தங்களை ஒரு நடிகராக நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். வெறும் ‘பிரபலம்’ மட்டுமே ஒரு படத்தைத் தியேட்டரில் ஓட வைக்காது. நடிப்பில் கோட்டை விட்டால், ரசிகர்கள் அவர்களை மீண்டும் ஸ்மார்ட்போன் திரைக்கே அனுப்பிவிடுவார்கள். அதே நேரத்தில், முன்னணி நடிகர்கள் தங்களை அப்டேட் செய்துகொள்ளாவிட்டால், இந்தப் புதிய அலை அவர்களை ஓரம் தள்ளுவதைத் தவிர்க்க முடியாது.

vijay-founder-of-cinemapettai

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.

View all posts →