தமிழ் சினிமாவில் வெற்றி கண்ட தரமான 5 துணை நடிகர்கள்.. ஹீரோவுக்கு நிகராக பாராட்டும் ரசிகர்கள்

நம் தமிழ் சினிமாவில் எத்தனையோ துணை நடிகர்கள், வில்லன்கள் இருந்தாலும் சில நடிகர்கள் மட்டுமே நம் மனதில் நீங்கா இடம் பிடித்திருப்பர். அதுமட்டுமல்லாமல் அவர்கள் நடிக்கும் திரைப்படங்களில் அவர்களை வைத்தே கதை நகரும் படி இயக்குனர்கள் அத்திரைப்படத்தை இயக்குவார்கள். அப்படி நம் தமிழ் சினிமாவில் கண்டெடுக்கப்பட்ட ஐந்து தரமான தமிழ் சினிமா வில்லன்களை தற்போது பார்க்கலாம்.

கிஷோர் குமார்: இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான பொல்லாதவன் திரைப்படத்தில் வில்லனாக அறிமுகமான கிஷோர்குமார் சிறந்த வில்லன் என்று பல விருதுகளையும் பெற்றார். தொடர்ந்து வடசென்னை, ஆடுகளம் உள்ளிட்ட படங்களில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார். தற்போது கிஷோர் குமார் தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் துணை நடிகர் மற்றும் வில்லனாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சம்பத் ராஜ்: நடிகர் சம்பத்ராஜ் நடிகர் விஜயகாந்தின் நடிப்பில் வெளியான நெறஞ்ச மனசு திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் வெளியான சரோஜா, கோவா, சென்னை 600028 உள்ளிட்ட பல திரைப்படங்களில் இவரது நடிப்பு இன்றளவும் பேசப்படக்கூடியவை. தொடர்ந்து தெலுங்கு, தமிழ், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் சம்பத்ராஜ் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

வேல ராமமூர்த்தி: தமிழில் வெளியான ஆயுதம் செய்வோம் திரைப்படத்தின் மூலமாக அறிமுகமான வேலராமமூர்த்தி தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து அசத்தினார். நடிகர் விஜய்சேதுபதி நடிப்பில் வெளியான சேதுபதி திரைப்படத்தில் வாத்தியார் என்ற வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த இவரை நம்மால் யாராலும் அவ்வளவு எளிதாக மறக்க முடியாது. இதை தொடர்ந்து நடிகர் சசிகுமார் நடிப்பில் வெளியான கிடாரி திரைப்படத்தில் கொம்பையா பாண்டியன் கதாபாத்திரத்தில் நடித்த வேல ராமமூர்த்தி சிறந்த வில்லன் என்ற பல விருதுகளையும் பெற்றார். இன்றுவரை பல திரைப்படங்களில் வில்லன், துணை நடிகர் உள்ளிட்ட கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹரிஷ் பெரடி: தமிழ், மலையாளம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகர் ஹரிஷ் பெரடி. விக்ரம் வேதா திரைப்படத்தில் இவர் வில்லனாக நடித்த நடிப்பை இன்றுவரை யாராலும் மறக்க முடியாது. அதைத்தொடர்ந்து நடிகர் விஜயின் மெர்சல், கமலஹாசனின் விக்ரம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மாரிமுத்து:தமிழில் பல திரைப்படங்களில் அசிஸ்டன்ட் இயக்குனராக பணிபுரிந்த மாரிமுத்து, பின்னர் வில்லன், துணை நடிகர், உள்ளிட்ட கதாபாத்திரங்களை ஏற்று நடிக்க ஆரம்பித்தார். யுத்தம் செய், நிமிர்ந்து நில் நடிகர் விஷாலின் கத்தி சண்டை, மருது உள்ளிட்ட பல திரைப்படங்களில் போலீஸ் கதாபாத்திரத்தில் ஏற்று நடித்தவர். தற்போது பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியலில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →