SJ Suryah: தமிழ் சினிமாவை பொறுத்த வரைக்கும் முன்பெல்லாம் வில்லன்கள் என்றாலே மக்களால் அதிகமாக வெறுக்கப்படுவார்கள். ஆனால் இப்போது ஒவ்வொரு படத்திலும் வில்லனிசம் என்பது தான் பயங்கர ட்ரெண்டாகிக் கொண்டிருக்கிறது. இதனாலேயே இயக்குனர்கள் ஒவ்வொரு படத்திற்கும் வித்தியாசமான வில்லனை களம் இறக்குவதில் அதிக கவனம் செலுத்துகிறார்கள். இயக்குனர்கள் தங்களுடைய படங்களில் நடிப்பது என்பது பல வருடங்களாக நிகழ்ந்து வரும் ஒன்று. ஆனால் இந்த ஐந்து இயக்குனர்கள் தங்களுடைய சிறந்த நெகட்டிவ் நடிப்பினால் மற்ற வில்லன்களையே தூக்கி சாப்பிட்டு இருக்கிறார்கள்.
கௌதம் வாசுதேவ் மேனன் : இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் தன்னுடைய படங்களில் சின்ன சின்ன ரோலில் தன்னுடைய முகத்தை காட்டி செல்வார். அதே போன்று காக்க காக்க திரைப்படத்தில் வில்லனாக நடித்த பாண்டியாவுக்கு இவர் தான் பின்னணி குரல் கொடுத்தவர். தற்போது இயக்கத்தோடு சேர்த்து நடிப்பிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அதிரடி சண்டை காட்சிகள், அதிபயங்கரமான வில்லத்தனம் என்று எதுவும் இல்லாமல் தன்னுடைய குரலை வைத்து வித்தியாசமான வில்லத்தனத்தை தற்போது காட்டி வருகிறார்.
எஸ் ஜே சூர்யா: குஷி மற்றும் வாலி போன்ற சிலாகிக்கும் படங்களை கொடுத்த எஸ் ஜே சூர்யா, அவரே ஹீரோவாக ஒரு சில படங்களில் நடித்தார். எஸ் ஜே சூர்யாவுக்கு ஹீரோ என்பதை தாண்டி வில்லனிசம் பயங்கரமாக செட் ஆகிவிட்டது. தன்னுடைய வித்தியாசமான முகபாவனைகள், மற்றும் குரலை வைத்து வில்லத்தனத்தில் மிரட்டி வருகிறார். மாநாடு படத்தில் இவர் நடித்த கேரக்டர் இன்றுவரை ரசிகர்களிடையே பேசப்பட்டு வருகிறது.
சமுத்திரகனி: சமுத்திரகனி முதன்முதலாக தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பரீட்சையமானது சுப்பிரமணியபுரம் திரைப்படத்தில் வில்லனாகத்தான். இயக்குனராக பல படங்கள் இயக்கி இருந்தாலும், தற்போது குணச்சித்திர நடிகராகவும், வில்லனாகவும் தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். தமிழ் சினிமா மட்டுமில்லாது சமுத்திரகனி இல்லாத தெலுங்கு படங்களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு மிரட்டி கொண்டிருக்கிறார்.
பார்த்திபன்: இயக்குனர் மற்றும் நடிகர் பார்த்திபன் எப்போதுமே ஹீரோயிசத்தில் கூட வித்தியாசத்தை காட்டக் கூடியவர். இவருக்கு வில்லன் கதாபாத்திரங்கள் கொடுக்கப்பட்ட போது கூட அதிலும் தன்னுடைய வித்தியாசமான நடிப்பை காட்டி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து விட்டார். நானும் ரவுடிதான் என்னும் திரைப்படத்தில் நகைச்சுவையான வில்லத்தனத்தை காட்டி மிரட்டி இருந்தார்.
மணிவண்ணன்: அரசியலில் நடக்கும் பல விஷயங்களை தன்னுடைய படங்களில் நக்கலாக சொல்லி வெற்றி பெற்ற இயக்குனர் மணிவண்ணன். தொடக்கத்தில் சத்யராஜ் மற்றும் கவுண்டமணியுடன் இணைந்து காமெடியில் கலக்கிக் கொண்டிருந்த இவர், அதன்பின்னர் வில்லத்தனத்திலும் மிரட்ட ஆரம்பித்தார். எட்டுப்பட்டி ராசா திரைப்படத்தில் இவர் நடித்த நெகட்டிவ் இன்று வரை தமிழ் சினிமா ரசிகர்களால் பேசப்பட்டு வருகிறது.