Villian actors turned to comedian: தமிழ் சினிமாவில் இப்போது இருக்கும் வில்லன் நடிகர்கள் எல்லாம், ஹீரோக்களை விட பயங்கர ஸ்மார்ட்டாக இருக்கிறார்கள். ஆனால் சில வருடங்களுக்கு முன்பு வில்லன் என்றாலே மிரட்டலான முக அமைப்பு, கணீர் குரல் என படம் பார்ப்பவர்களை மிரள விட்டிருப்பார்கள். வில்லத்தனத்தில் மிரட்டி அதற்கு கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லாமல் காமெடியனாக மாறிய நடிகர்களும் இருக்கிறார்கள். அதிலும் இந்த ஐந்து நடிகர்கள் முரட்டுத்தனமான வில்லத்தனத்தை காட்டி அதன்பின்னர் வயிறு குலுங்கவும் சிரிக்க வைத்திருக்கிறார்கள்.
எம் ஆர் ராதா: நடிகவேள் எம் ஆர் ராதா, அந்த காலத்தில் இருந்த மற்ற வில்லன்களைப் போல வாள் சண்டை மற்றும் கம்பு சண்டை எல்லாம் போட்டதில்லை. தன்னுடைய மிரட்டும் பார்வை, மற்றும் பேச்சு மூலம் தன்னுடைய வில்லத்தனத்தை காட்டியவர். வில்லன் நடிகராக மட்டுமில்லாமல் இவர் காமெடியிலும் தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அனைவரையும் வயிறு குலுங்க சிரிக்க வைத்திருக்கிறார்.
அசோகன்: 60களின் முன்னணி ஹீரோக்களான மக்கள் திலகம் எம்ஜிஆர் மற்றும் நடிகர் திலகம் சிவாஜிக்கு தரமான வில்லனாக இருந்தவர் அசோகன். இவரும் இறங்கி சண்டை காட்சிகளில் எல்லாம் நடித்ததில்லை. ஒரே வசனத்தை இரண்டு முறை தன்னுடைய வித்தியாசமான குரல் வளத்தால் பேசி பார்ப்பவர்களை மிரள விட்டிருக்கிறார். காமெடியனாகவும் தமிழ் சினிமா ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தார்.
பாலையா: நடிகர் பாலையா நிறைய படங்களில் வில்லனாக பயங்கரமாக நடித்த மிரட்டி இருக்கிறார். வில்லனாக மட்டுமே நடித்து விடாமல் காமெடியிலும் ஒரு ரவுண்டு வந்தார் பாலையா. காதலிக்க நேரமில்லை என்னும் திரைப்படத்தில் பாலையா மற்றும் நாகேஷ் உடைய காம்பினேஷனில் வரும் காமெடி காட்சி இன்று வரை தமிழ் சினிமா ரசிகர்களால் ரசிக்கப்படுகிறது.
மணிவண்ணன்: கொங்கு நாட்டு வட்டார தமிழை வித்தியாசமாக பேசி வில்லனாக மிரட்டியவர் மணிவண்ணன். நெப்போலியன் நடித்த எட்டுப்பட்டி ராசா திரைப்படத்தில் இவர் நடித்த வில்லன் கதாபாத்திரம் இன்று வரை படம் பார்ப்பவர்களை மிரட்டி எடுத்திருக்கும். வில்லத்தனத்தில் பயங்கரம் காட்டிய மணிவண்ணன், சத்யராஜ் மற்றும் கவுண்டமணி கூட்டணியில் நடித்த காமெடி காட்சிகள் அத்தனையுமே இன்று வரை சூப்பர் ஹிட் தான்.
காதல் தண்டபாணி: நடிகர் காதல் தண்டபாணி இப்போது உயிருடன் இல்லை என்றாலும் இவர் வில்லனாக மிரட்டிய ஒரு சில படங்களை இன்று வரை யாராலும் மறக்க முடியாது. 90ஸ் கிட்ஸ் ஃபேவரிட் படமான காதல் திரைப்படத்தில் ஹீரோயின் அப்பாவாக இவர் நடித்த வில்லன் கதாபாத்திரம் படம் பார்ப்பவர்கள் அத்தனை பேரையும் பதற விட்டிருந்தது. அதிலிருந்து அப்படியே மொத்தமாக மாறி வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தில் சத்யராஜ் மற்றும் சிவகார்த்திகேயனுடன் இவருடைய காமெடி காட்சிகள் வயிறு குலுங்க சிரிக்க வைத்திருந்தது.