அப்போ ஏற்க மறுத்தேன் இப்போ வருத்தமா இருக்கு.. நீலாம்பரி கேரக்டர் பற்றி புலம்பிய நடிகை

தமிழ் சினிமாவின் கல்ட் கிளாசிக் படங்களில் ஒன்றாக ரசிகர்களுக்கு நினைவில் வருவது “படையப்பா” தான். குறிப்பாக ரஜினிகாந்த் ரம்யா கிருஷ்ணன் காம்போவில் நீலாம்பரி கதாபாத்திரம் இன்று வரை பேசப்படும், மறக்க முடியாத வில்லி பாத்திரமாக உள்ளது.

ஆனால், அந்தக் கேரக்டர் முதலில் ரம்யா கிருஷ்ணனுக்கு எழுதப்பட்டதல்ல என்பதை சமீபத்தில் ஒரு பேட்டியில் நடிகை மீனா தெரிவித்துள்ளார்.படையப்பா படத்தில் நீலாம்பரி கேரக்டரில் முதலில் நடிக்க இருந்த நடிகை நான் தான். ரஜினிகாந்துடன் குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்திருக்கிறேன். பின்னாளில் அவருக்கு ஜோடியாகவும் நடித்தேன்.

ஆனால் படையப்பா சமயத்தில் நான் பாசிட்டீவான கேரக்டரில் மட்டும் நடிக்க வேண்டும் என்று முடிவு செய்திருந்தேன். அதனால் நெகடிவ் கேரக்டரை மறுத்துவிட்டேன். இப்போது நினைக்கும்போது தான் அந்த முடிவு தவறாக இருந்தது போல தோன்றுகிறது” என்றார்.

இந்த வெளிப்பாடு ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது. ஏனெனில், இன்று வரை நீலாம்பரி என்றாலே அனைவருக்கும் ரம்யா கிருஷ்ணன் தான் நினைவுக்கு வருகிறார். அந்தக் கதாபாத்திரத்தில் அவர் காட்டிய சிறப்பான எக்ஸ்பிரஷன், உடல் மொழி, தீவிரமான கண் பார்வை எல்லாம் அந்த பாத்திரத்தை சினிமா வரலாற்றில் மறக்க முடியாத ஒன்றா உள்ளது.

ஆனால் அந்த வாய்ப்பு முதலில் மீனாவிடம் இருந்தது என்பதே ரசிகர்களுக்கு வியப்பை ஏற்படுத்தியுள்ளது. சில ரசிகர்கள், “மீனாவும் அந்த பாத்திரத்தில் சிறப்பாக நடித்திருப்பார், ஆனால் ரம்யா மிஞ்ச முடியாது” என்கிறார்கள். இன்னும் சிலர் நீலாம்பரி என்றால் ரம்யா கிருஷ்ணன் தான் பொருத்தமானவர்” என்கிறார்கள்.

மீனா இவ்வாறு வெளிப்படையாக பகிர்ந்ததால், மீண்டும் படையப்பா படமும், அதில் வந்த நீலாம்பரி கேரக்டரும் ரசிகர்களிடையே ஹாட் டாபிக்காக உள்ளது.