ஒரே வருடத்தில் 37 படத்திற்கு இசை.. ராஜாவிற்கே டப் கொடுத்த இசையமைப்பாளர்

தமிழ் சினிமாவின் இசை உலகில் “இசைஞானி” என்று சொன்னால் இளையராஜா, “இசைப்புயல்” என்று சொன்னால் ஏ.ஆர்.ரஹ்மான். இவர்கள் இல்லாமல் 1990-களில் ஒவ்வொரு தெருவிலும், ஒவ்வொரு வானொலியிலும் ஒலித்துக் கொண்டே இருந்தது ஒருவரின் பாடல். அவரை பற்றிதான் பார்க்கபோகிறோம்.

37 படங்களுக்கு இசை – ஒரு வருடத்தில்!

1997 ஆம் ஆண்டில் தேவா பாடல்கள் அனைத்தும் ஹிட். ஒரே வருடத்தில் 37 படங்களுக்கு இசையமைத்து அப்போது தமிழ்த் திரைப்படத் துறையில் புதிதாக ஒரு சாதனையைப் பதிவு செய்தார். பாடல் வெளியீடுகள் வந்தாலே சந்தை முழுக்க தேவா இசையே ஒலித்தது. “கண்ணே காதல் கண்ணே”, “சலங்கை ஒலி கேட்டதா” போன்ற பாடல்கள் அந்தக் காலத்தில் ரசிகர்கள் விருப்ப பாடல் என்று கூறலாம்.

தீபாவளி தினத்தில் 8 படங்கள்!

அந்த சாதனையைத் தொடர்ந்து 1997 தீபாவளி தமிழ் சினிமாவில் மறக்க முடியாத ஒன்று. ஒரே நாளில் 8 படங்கள் திரையரங்குகளில் வெளியாக, அதில் ஆஹா, பொற்காலம் போன்ற பெரும்பாலான படங்களுக்கு தேவா இசையமைத்திருந்தார். ரசிகர்கள் எந்த தியேட்டரில் எந்தப் படம் பார்க்கலாம் என்று குழப்பமடைந்தாலும், ஒலித்தது எல்லாம் தேவாவின் குரலாக இருந்தது.

இந்த வெற்றியின் பின்னால் தனது தம்பிகளின் உழைப்பே காரணம் என்று தேவா தெரிவித்துள்ளார். “நான் தனியாக இதைச் செய்ய முடியாது. இரவு பகலாக பாடல்களைத் தயார் செய்ய, என் தம்பிகள் என்னோடு இணைந்து உழைத்தார்கள். அதுதான் இந்த சாதனையை சாத்தியமாக்கியது” என்று அவர் நெகிழ்ந்து கூறினார்.

ரசிகர்கள் மனதில் நிலைத்த இசை

இன்று பல இசையமைப்பாளர்கள் வந்தாலும், தேவாவின் இசைக்கு ஒரு தனி இடம் உண்டு. குடும்பக் கதைகள், காமெடி படங்கள், மாஸ் ஹீரோ படங்கள் என எதற்கும் தேவாவின் இசை அப்போதைய காலத்தில் சரியான பொருத்தமாக இருந்தது. குறிப்பாக 1997 ல் அவர் செய்த சாதனை, தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு பெரும் சாதனை என்று கூறலாம்.